குடியிருப்பு வட்டார வணிகர்களுக்குக் கைகொடுக்கும் புதிய திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 12 மாத காலம் நடப்பில் இருக்கும். இதன்கீழ், இவ்வணிகர்களுக்கு வாடகைக் கழிவுகளும் புத்தாக்கப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
குடியிருப்பு வட்டார புத்தாக்க உருமாற்றத் திட்டத்தின்கீழ், அரசாங்கம் தற்காலிக இடங்களைக் கட்டித்தரும். முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் இவை அமைந்திருக்கும்.
புதிய வர்த்தகச் சிந்தனைகளை சோதிக்க விரும்பும் வணிகர்கள் இந்த இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான முன்னோடித் திட்டம் அங் மோ கியோ நகர மையத்தில் முதலில் தொடங்கப்படும். மேல்விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் கூறினார்.
"திட்டத்தில் பங்குபெறும் குடியிருப்பு வட்டார வணிகர்கள், வெற்றிபெற்ற தொழில்முனைவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவர். தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நிர்வகிக்கும் கடைப் பகுதியில் வாடகைக் கழிவு பெற்று அவர்கள் கடை அமைக்கலாம்," என்றார் அவர்.
புத்தாக்கத் தொழில்முனைப்பு வல்லுநர் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்துவதாகவும் மன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
பணியிடை மாற்றத்தை விரும்பும் நிபுணத்துவத் தொழிலாளர்களுக்கு இது உதவும் என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் குறிப்பிட்டார்.
உள்ளூர்த் திறனாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் இலக்கு கொண்டுள்ள இத்திட்டம் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் இணையப் பாதுகாப்பு, இயந்திர மனிதவியல் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெற உதவுகிறது.
நிறுவனங்கள் அவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசாங்கம் உதவும் என்றார் அமைச்சர் டான்.
வெளிநாடுகளில் கால்பதிக்கவும் விநியோகத்தைப் பன்முகப்படுத்தவும் உதவி வழங்கப்படும் என்றார் அவர்.

