தெரிந்தவர்கள் தொடர்புகொள்க
ரேயான் டிட்டோ அப்துல்லா என்ற இந்த 15 வயது சிறுவனைக் கடந்த ஞாயிறு முதல் காணவில்லை.
இந்தப் பையன் இருக்குமிடம் பற்றிய விவரங்கள் யாருக்காவது தெரிந்தால் அதைத் தங்களிடம் தெரியப்படுத்தும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ரேயான், அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 584ல் இம்மாதம் 26ஆம் ஆம் தேதி பிற்பகல் சுமார் 2 மணிக்குக் கடைசியாகக் காணப்பட்டான்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-2550000, என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம். வெளிநாட்டில் இருந்து தொடர்புகொள்ள +65 6255-0000 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம். அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையத்தளத்தில் தகவல்களைத் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் தகவல்கள்
பரம ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சீன நாட்டு மாதுக்குப் புகலிடம்: மலேசியருக்குச் சிறை
சீனாவைச் சேர்ந்த ஒரு மாதுக்குச் சட்டவிரோதமாக புகலிடம் கொடுத்த மலேசியர் ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஹி யான், 36, என்ற அந்தப் பெண், ஆக்ஸ்லி ரைஸ் பகுதியில் வாடகை வீடு ஒன்றைப் பெற, வூ சீ கிட், 35, என்ற அந்த மலேசியரும் வாங் ஸியோசெங், 30, என்ற சிங்கப்பூர் ஆடவர் ஒருவரும் உதவியதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வீட்டை உள் வாடகைக்குக் கொடுத்ததற்காக வாங்கிற்கு 44 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. $1,400 அபராதமும் விதிக்கப்பட்டது.
ஹி யான், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் ஆண்டு ஆக்ஸ்லி ரைஸ் வீடு ஒன்றில் கைதானார். அவருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அனுமதி 2020 அக்டோபர் 5ஆம் தேதியே காலாவதி ஆகி இருந்தது. புலன்விசாரணையில் உதவுவது, நீதிமன்றத்தில் முன்னிலையாவது போன்ற தேவை உள்ள வெளி நாட்டினருக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
கூட்டுரிமை, வீவக வீட்டு வாடகை ஜனவரியில் மெதுவாகக் கூடியது
கூட்டுரிமை வீடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை கடந்த ஜனவரியில் தொடர்ந்து அதிகரித்தது. என்றாலும் அந்த அதிகரிப்பு கொஞ்சம் குறைவாக இருந்தது. கூட்டுரிமை வீடுகளின் வாடகை கடந்த 11 மாதங்களில் ஆகக் குறைவாக ஜனவரியில் 1.4%தான் கூடியது.
அதேவேளையில், வீவக வீடுகளின் வாடகை ஜனவரி யில் 0.6%தான் அதிகரித்தது. 99.co, எஸ்ஆர்எக்ஸ் நிலச்சொத்து இணைய வாயில்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.
வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை டிசம்பருடன் ஒப்பிடுகையில் 0.9% குறைந்து ஜனவரியில் 6,285 வீடுகளாக இருந்தன.
மொத்தத்தில் பார்க்கையில், சென்ற ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை வாடகை 33.2% கூடி இருக்கிறது. வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை டிசம்பரில் 2,513 என்று மதிப்பிடப்படுகிறது. இது ஜனவரியில் 12.2% அதிகரித்து 2,819 ஆகியது.

