எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்றும் கனரக இழுவை வாகனம் ஒன்றும் புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் விபத்துக்குள்ளானதை அடுத்து ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பேருந்தை ஓட்டிவந்த 53 வயது ஓட்டுநர் தன் இருக்கையில் சிக்கிக்கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை மீட்டனர்.
இதர எட்டு பயணிகளும் காயம் அடைந்தனர். அந்தப் பயணிகளுக்கு வயது 18 முதல் 57 வரை என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
கனரக இழுவை வாகனத்தை ஓட்டி வந்த 60 வயது ஓட்டுநர் காவல்துறையின் புலன்விசாரணையில் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று முற்பகல் சுமார் 11 மணிக்கு எச்சரிக்கை விடுத்தது.
சிலேத்தார் விரைவுச்சாலையின் 3வது தடத்தைத் தவிர்த்துக்கொள்ளும்படியும் பிறகு 2, 3, 4 ஆகிய தடங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படியும் ஆணையம் ஆலோசனை கூறியது.
இதனிடையே, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவம், தொடர்புத் துறையின் துணைத் தலைவரான திருவாட்டி கிரேஸ் வூ, விபத்தில் சிக்கிய சேவை எண் 161 பேருந்தில் இருந்த எல்லா பயணிகளோடும் நிறுவனம் தொடர்புகொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
காயம் அடைந்தவர்கள் விரைவாக முழுமையாகக் குணமடைய வேண்டும் என்று கூறிய அவர், எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். காவல்துறை புலன்விசாரணையில் எஸ்பிஎஸ் டிரான்சிட் உதவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

