சிங்கப்பூரின் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைமுறை மாற்றம் காணவிருக்கிறது.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இனி வழக்கநிலை (கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்), விரைவுநிலை என்ற பிரிவுகளின்கீழ் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படமாட்டார்கள்.
அதற்குப் பதில், 1, 2, 3 என மூன்று பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இடம்பெறும்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
இந்த மூன்று பிரிவுகள், மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்கானவை மட்டுமே.
மாணவர்களின் உயர்நிலைப் பள்ளி அனுபவத்தை இவை எந்த வகையிலும் பாதிக்கமாட்டா.
ஒவ்வொரு வகுப்பிலும் எல்லாவகைப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இடம்பெற்றிருப்பர்.
'ஜி1', 'ஜி2', 'ஜி3' என மூன்று நிலைகளில் அவர்கள் பயில விரும்பும் பாடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் தற்போது இருப்பதைப்போல் வழக்கநிலை, விரைவுநிலை என்ற பேதங்கள் இருக்காது எனக் கூறப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, முழுமையான பாட அடிப்படையிலான தரம்பிரிப்புமுறை 28 பள்ளிகளில் சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த இந்த அறிவிப்பு, மாணவர்களின் கல்விப் பாதைகளை விரிவுபடுத்த கல்வி அமைச்சு மேற்கொள்ளும் முயற்சியைக் காட்டுகிறது.
பலதரப்பட்ட மாணவர்கள் ஒரே வகுப்பில் பயில்வதையும் வகுப்பறையிலும் பள்ளியிலும் அவர்கள் கலந்து பழகுவதையும் இது ஊக்குவிக்கிறது.
கல்வி தொடர்பில், தேவையற்ற போட்டிகளைத் தவிர்க்கவும் இந்த முறை உதவுகிறது.
பாட அடிப்படையிலான தரம்பிரிப்பு முறையில் சவால்களும் இருக்கின்றன என்று அமைச்சர் சான் கூறினார்.
வெவ்வேறு திறன்களைக் கொண்ட மாணவர்களுக்கு கால அட்டவணை வரைவது உள்ளிட்ட சவால்களை சுட்டினார்.
"பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கூடுதல் வேலை. மேலும் கடினமாக உழைக்க நேரிடும்," என்று திரு சான் குறிப்பிட்டார்.

