முழுமையான பாட அடிப்படையிலான தரம்பிரிப்பு முறை, மாணவர்களின் கல்விப் பயணத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறிஇருக்கிறார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங், அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் ஆகியோர் இந்தப் பகுப்புமுறை குறித்த கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் சான் இவ்வாறு கூறினார்.
இந்தப் பகுப்புமுறையின்கீழ், தகுதிபெறும் மாணவர்கள் சில பாடங்களை மேம்பட்ட நிலையில் பயிலவும் வாய்ப்பு வழங்கப்படும். விருப்பத் தெரிவுப் பாடங்களை, குறைவான நிலையில் பயிலவும் இது வாய்ப்பளிக்கும்.
உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் முடிவில், அனைத்து மாணவர்களும் பொதுவான 'எஸ்இசி' எனப்படும் 'சிங்கப்பூர்-கேம்பிரிட்ஜ் உயர்நிலைக் கல்விச் சான்றிதழைப் பெறுவர்.
வரும் 2027ஆம் ஆண்டில் இருந்து இதில், வழக்கநிலை, சாதாரண நிலை என்ற பாகுபாடுகள் குறிப்பிடப்படாது.
பள்ளிகள் இந்தப் பகுப்புமுறையைக் கடைப்பிடிப்பதன் தொடர்பில் கூடுதலாக உழைக்க நேரிட்டுள்ளது என்று அமைச்சர் சான் கூறினார்.
அதேவேளையில், முழுமையான பாட அடிப்படையிலான தரம்பிரிப்பு முறையின்கீழ் மாணவர்கள் தங்களது கற்றல் பயணத்திற்கு மேம்பட்ட அளவில் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டினார்.
பாடங்களை விருப்பத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யாமல், அனைத்துப் பாடங்களுக்கும் நேரம் ஒதுக்க உதவும் வகையில் பாடங்களை மேம்பட்ட அல்லது குறைவான நிலையில் தெரிவுசெய்தல் நன்மையளிக்கும்.
'ஐபி' எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை வழங்கும் பள்ளிகளும் சிறப்புப் பள்ளிகளும் இந்தப் பகுப்புமுறையை முழுவதுமாகக் கடைப்பிடிக்க இயலாது என்று அமைச்சர் குறிப்பிட்டார். நேரடி மாணவர் சேர்க்கைமுறை மூலம் பல்வேறு திறன்கொண்ட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள பள்ளிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன.

