முதியவர் ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக 36 வயது ஆடவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆலன் சுவா கிம் வீ (படம்) எனப்படும் அவர் தாக்கியதால் தலையில் காயமடைந்த முதியவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தாக்குதல் சம்பவம் 2021 டிசம்பர் 25ஆம் தேதி நிகழ்ந்தது.
ஹவ்காங் மால் கடைத்
தொகுதியில் காலை உணவருந்திய பின்னர் நடந்து சென்ற சுவா, ஹவ்காங் அவென்யூ 5ல் உள்ள வீவக புளோக் ஒன்றின் வெற்றுத்தளத்தில் இங் சியோ லெங் எனப்படும் 74 வயது முதியவர் புகைப்பிடித்ததைக் கண்டார்.
உடனடியாக அவரைப் படம் எடுத்தார் சுவா. ஊன்றுகோல் துணையுடன் நடக்கக்கூடிய முதியவர் அதனைஅறிந்து சுவாவைத் துரத்தினார்.
தம்மை அவர் தாக்க வருவது போல உணர்ந்த சுவா, தமது வலது தோளால் அந்த முதியவரை முட்டி தாக்கினார். பின்பக்கமாகச் சாய்ந்த முதியவர் தரையில் விழுந்ததால் அவரின் தலையில் அடிபட்டது.
அதனை அறிந்து பதறிய சுவா, காவல்துறையை அழைத்து நடந்த விவரத்தை விளக்கியதுடன் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டார். ஊன்றுகோலால் முதியவர் தாக்க வந்ததால் திருப்பி அடித்ததாக காவல்துறையிடம் அவர் தெரிவித்தார்.
டான் டோக் செங் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக அன்று இரவு 10 மணியளவில் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
சுவாவைத் தற்காத்து வாதாடிய வழக்கறிஞர் ரஞ்சித் சிங், சுவா பொதுநலனில் அக்கறை உள்ளவர் என்றும் புகைபிடிக்க அனுமதிக்கப்படாத வீவக புளோக் வெற்றுத்தளத்தில் ஒருவர் புகைபிடிப்பதைக் கண்டதும் அதுபற்றி புகார் அளிக்கும் நோக்கில் படம் எடுத்ததாகவும் கூறினார்.
பொது இடங்களை அசுத்தப்
படுத்துவது, உயர்மாடியிலிருந்து குப்பை வீசுவது உள்ளிட்ட வீடமைப்புப் பேட்டை தொடர்பான குற்றங்களைக் கண்டு அதுபற்றி OneService இணையவாசலில் தமது கருத்துகளை சுவா பதிவிடுவது வழக்கம் என்றும் தற்காப்பு வழக்கறிஞர் கூறினார்.