தண்ணீர் அதிகம் தேவைப்படும் தொழில்துறைகளுக்கு புதிய விதிமுறை
தண்ணீர் அதிகம் தேவைப்படும் தொழில்துறைகள் தங்கள் தண்ணீர் தேவையைக் குறைப்பதற்கு உதவும் வகையில் பொதுப் பயனீட்டுக் கழகம் அவற்றின் புதிய திட்டங்களில் மறுசுழற்சி அம்சங்கள் கட்டாயம் உள்ளடக்கப்படுவதை உறுதிப்படுத்தும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திருவாட்டி ஃபூ, முன்வார்ப்பு, மின்னணுவியல் மற்றும் உயிர்மருத்துவத் தொழில்துறைகள் ஆகியவற்றின் புதிய திட்டங்களும் இதில் அடங்கும். அவை இல்லம் அல்லாத தண்ணீர் தேவையில் 17 விழுக்காட்டைப் பிரதிபலிக்கிறது என்றார்.
சிங்கப்பூர் நாள் ஒன்றுக்கு 440 மில்லியன் கேலன் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. வரும் 2065ஆம் ஆண்டுக்குள் மொத்த தண்ணீர் தேவை கிட்டத்தட்ட இரட்டிப்பாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்வதால் தங்கள் தண்ணீர் கட்டணத்தைக் குறைப்பதுடன் நீண்டகாலப் போட்டித்தன்மைக்குப் பங்களிக்கவும் உதவ முடியும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
தண்ணீர் தேவை அதிகரிப்பின் பெரும்பகுதி இல்லம் அல்லாத துறையிலிருந்துதான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள அதன் 55% மொத்த தண்ணீர் பயன்பாடு 60 விழுக்காட்டைத் தாண்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று கழகம் விளக்கியது.
ஆக, ஆண்டுக்கு 60,000 கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் பகுதி மின்கடத்தி உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நீர் உற்பத்தி ஆலைகள், தங்கள் நீர் பயன்பாட்டில் குறைந்தது 50 விழுக்காட்டை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
அதேபோல, ஆண்டுக்கு அதே அளவிலான நீரைப் பயன்படுத்தும் மின்னணுவியல் மற்றும் உயிர்மருத்துவ ஆலைகளும் தங்கள் கழிவுநீரில் ஓரு குறிப்பிட்ட பகுதியை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ஒன்பது மில்லியன் கேலன் தண்ணீரைச் சேமிக்க முடியும். இது 2035ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு 15 ஒலிம்பிக் நீச்சல் குள நீருக்கு ஒப்பாகும் என்றும் கழகம் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுடன் ஆலோசனை நடத்திய கழகம், நிறுவனங்கள் தங்கள் புதிய திட்டங்களில் மறுசுழற்சி தேவைகளைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளதாகவும் முன்வார்ப்புப் ஆலைகளின் தற்போதைய சராசரி மறுசுழற்சி விகிதம் 43 விழுக்காடாக உள்ளது என்றும் குறிப்பிட்டது.
தீவின் வடக்குப் பகுதியில் உள்ள இல்லம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், கிராஞ்சி நீர் சுத்திகரிப்பு ஆலையிலும் கிராஞ்சி நியூவாட்டர் ஆலையிலும் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.
தெங்கா புதுநகரம், சுங்கை காடுட் சுற்றுப்புற நகரம் ஆகிய புதிய குடியிருப்பு மற்றும் தொழில்துறைகளில் மேம்பாடுகள் போன்ற பெரிய திட்டங்கள் வரும் வேளையில் இத்தகைய நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் மேம்பாட்டு நடவடிக்கைகள் புத்துணர்ச்சியைத் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

