வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) எல்லா 374 காப்பிக் கடைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் மலிவு விலை உணவுத் தெரிவுகள் இருக்கும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நேற்று தெரிவித்தார்.
தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத் தின்போது பேசிய அமைச்சர், புதிய கடைகளுக்கான மலிவு விலை உணவுத் திட்டம் 2018ல் இருந்து நடப்பில் இருந்தாலும் இப்போது அது எல்லா வீவக காப்பிக் கடைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 72 காப்பிக் கடைகள் மலிவு விலை உணவு வகைகளை வழங்குகின்றன. அவை பொதுவில் $3.00லிருந்து $3.50க்குள் இருக்கும். கறுப்பு காப்பி $1லிருந்து $1.15 வரை இருக்கும்.
இவ்வாண்டு மே மாதம், மூன்று ஆண்டு கடை வாடகை புதுப்பிப்பை எதிர்நோக்கும் எல்லா காப்பிக் கடைகளும் நான்கு மலிவு விலை உணவு வகைகளையும் இரண்டு மலிவு விலை பானங்களையும் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
உணவங்காடி நிலைய நடத்துநர்களும் கடை உரிமையாளர்களுக்கும் அவர்கள் செலுத்தும் வாடகைக் கட்டணத்திலிருந்து ஓராண்டுக்கு ஐந்து விழுக்காடு கழிவு கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.
"இது காப்பிக் கடைகளில் மலிவு விலை உணவுத் தெரிவுகள் கிடைப்பதை உறுதி செய்யும். மலிவு விலை உணவு என்பது முழுமையான, பிரதான உணவாக இருக்க வேண்டும். அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு கடைகளிலிருந்து வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
"மேலும் மலிவு விலை உணவுத் தெரிவுகளில் இரண்டு, சாதம் சார்ந்ததாகவும் அவற்றில் ஒன்று ஹலால் உணவாகவும் இருக்க வேண்டும். மலிவு விலை பானங்களாக கோப்பி-ஓ மற்றும் தே-ஓ குறிப்பிடப்பட்டுள்ளன," என்றார் திருவாட்டி சிம் ஆன்.

