அமரர் லீ குவான் இயூவின் உயில் பற்றிய மின்னூலில் பல்வேறு தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்தன என்றும் அது நீதிமன்றம் அறிந்தவற்றிலிருந்து மாறுபட்டிருந்தன என்று மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் நேற்று தெரிவித்தார்.
"த பேட்டல் ஓவர் லீ குவான் இயூஸ் லாஸ்ட் வில்" எனும் தலைப்பு கொண்ட அந்த நூலை எழுதியவர் உள்ளூர் எழுத்தாளர் சுதிர் தாமஸ் வடகேத். அது கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் பிரதமரின் உயில் பற்றியும் அவரது 38 ஆக்ஸ்லி ரைஸ் வீட்டுக்கான உரிமைப் போராட்டம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.
"இந்நூலில் உள்ள கருத்துகள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன," என்று திரு லீ குவான் இயூவின் மறைவுக்குப் பின் அவரது சொத்துகளின் நிர்வாகம் குறித்து கண்டறியும் அமைச்சர்நிலைக் குழுவின் தலைவருமான திரு டியோ சொன்னார்.

