சிங்கப்பூரின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் வெள்ள நிர்வாக ஆற்றல்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் $125 மில்லியன் மதிப்பிலான ஆய்வுத் திட்டம் தொடங்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம், நாடளாவிய கடலோரப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு வெள்ளப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்ட பொதுப் பயனீட்டுக் கழகம், பருவநிலை மாற்றத்தால் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சிறப்பாக நிர்வகிக்க வழிவகுக்கும் என்று கூறியது.
இந்தப் புதிய திட்டத்தில், நான்கு ஆய்வுப் பகுதிகள் இருக்கும். அவை ஒன்றுசேர்ந்து புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அறிவார்ந்த தீர்வுகளை நாட்டின் நகரமய மற்றும் நிலத் தட்டுப்பாடுடைய சுற்றுச்சூழலுக்கு ஆதரவளிக்கும் என்றும் கழகம் விவரித்தது.
நிலைத்தன்மைமிக்க கடலோரப் பாதுகாப்புத் தீர்வுகள், சதுப்புநிலங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவார்ந்த நிர்வாகத் தீர்வுகள் ஆகியவற்றின் மேம்பாடுகள் புதிய திட்டத்தில் அங்கம் வகிக்கும்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக, சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்மட்டத்தின் அளவு 2100ஆம் ஆண்டுவாக்கில் ஒரு மீட்டர் வரை உயரக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.
அடிக்கடி வரும் கடுமையான புயல் காரணமாகவும் கடுமையான மழைப் பொழிவு காரணமாகவும் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பும் உண்டு என்று கூறப்படுகிறது.

