சாங்கி பாயிண்ட் வட்டாரத்திற்கான திட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சுமார் 200 பாரம்பரிய கட்டடங்களை உள்ளடக்கி ஆய்வு ஒன்று நடத்தப்படும்.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கட்டடங்கள், அவற்றின் வடிவமைப்புகள், அமைப்பு முறைகள் ஆகியவற்றின் வரலாற்று, பாரம்பரிய முக்கியத்துவத்தை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதற்காக ஆய்வு ஒன்றை நடத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 100 ஹெக்டர் பரப்பளவைக்கொண்ட சாங்கி பாயிண்டில் உள்ள கட்டடங்களை உள்ளடக்கி நடத்தப்படும் அந்த ஆறு மாத கால ஆய்வு, ''சாங்கி பாயிண்டில் பாரம்பரிய மதிப்புள்ள சில கட்டடங்கள் இருக்கின்றன,'' என்று குறிப்பிடப்படும் என அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
என்றாலும் விரிவான விவரங்கள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.
சாங்கி பாயிண்ட் வட்டாரத்திற்கான யோசனைகளை முன்வைக்கும் போட்டி ஒன்று 2021 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
அப்போது நகர மறுசீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் நில ஆணையமும் ஒரு தகவலை வெளியிட்டன.
சாங்கி பாயிண்ட் வட்டாரத்தில், பிரிட்டிஷ்காரர்களால் 1920களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் இருக்கின்றன என்று அந்தத் தகவல் தெரிவித்தது.
இப்போது சாங்கி பாயிண்ட் வட்டாரம் விடுமுறைக் காலத்தை கழிப்பதற்கான பங்களா வீடுகள், கடற்கரையை நோக்கிய குடில்கள், விளையாட்டு மனமகிழ் மன்றங்கள் முதலானவற்றுடன் மிகவும் பிரபலமான கடலோர வட்டாரமாகத் திகழ்கிறது.
அதோடு, பூலாவ் உபின் செல்வதற்கான வழியாகவும் அது திகழ்கிறது என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்திருந்தன.
ஆய்வு இடம்பெறவிருப்பதன் காரணமாக சாங்கி பாயிண்ட் வட்டாரத்திற்குப் பல மாற்றங்கள் வருமா என்று கேட்டபோது இப்போதைக்குத் திட்டவட்டமான மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும் எதிர்கால திட்டங்களைத் தீட்டும்போது ஆய்வு முடிவுகள் கருத்தில்கொள்ளப்படும் என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.
நகர மறுசீரமைப்பு ஆணையம் 2019ல் ஓர் அறிவிப்பை விடுத்தது. சாங்கி பாயிண்ட் கடற்கரையின் மேலும் பல பகுதிகள் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
கடலோரக் காடு, கடற்கரையை எதிர்நோக்கிய நில வடிவமைப்புகள் ஆகியவற்றின் மூலம் அதிகாரிகள் அந்த வட்டாரத்தின் கடலோர ரம்மியத்தை மேம்படுத்துவார்கள் என்று இந்த ஆணையம் அப்போது தெரிவித்தது.