டாக்சி ஓட்டுநர் ஒருவர் தனது போக்குவரத்து விபத்து வழக்கை கவனக்குறைவாகக் கையாண்ட வழக்கறிஞர் மீது வழக்கு தொடுத்திருந்தார்.
ஆனால் அதில் அவருடைய வழக்கறிஞர் முன்னிலையாகாததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்குத் தள்ளுபடியானதற்கு டாக்சி ஓட்டுநர் காரணம் அல்ல என்பதால் அந்த வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் ஏற்று நடத்த அனுமதியளித்துள்ளது.
2022 ஏப்ரலுக்கும் ஆகஸ்டுக்கும் இடையே டாக்சி ஓட்டு நரான செங் ஹோ சூன் சார்பில் எஸ்.கே குமார் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த புதிய வழக்கறிஞர்கள் வழக்குக்கு முந்திய கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்ல்ஸ் இயோ ஏப்ரலில் இரண்டு விசாரணைகளில் முன்னிலையானார். ஆனால் அப்போது அவரிடம் வழக்கறிஞர் தகுதிக்கான சான்றிதழ் இல்லை.
2022 செப்டம்பரில் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் எந்த வழக்கறிஞரும் முன்னிலையாகவில்லை. இதனால் தனது முன்னாள் வழக்கறிஞர் பீட்டர் எஸகியலுக்கு எதிராக செங் தொடுத்த வழக்கை உதவிப் பதிவாளர் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் தனது வழக்கைத் தள்ளுபடி செய்த கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி திரு செங் மேல்முறையீடு செய்தார். இதனை நேற்று ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்தது.
நீதிபதி டான் சியோங் தாய்யே தனது எழுத்துபூர்வமான தீர்ப்பில் செங்கின் போக்குவரத்து விபத்து தொடர்பான வழக்கு, வழக்கறிஞர் எஸகியலுக்கு எதிரான வழக்கு ஆகிய இரண்டும் பொறுப்பற்ற வழக் கறிஞர்கள் வராததால் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக் காட்டியிருந்தார்.
இதனால், வாதி தனது சாலை போக்குவரத்து விபத்து வழக்கில் நிவாரணம் மற்றும் நீதியைக் கோரும் முயற்சியில் இரண்டு முறை கடுமையாகப் பாதிக்கப்பட்டார் என்று நீதிபதி டான் தெரிவித்தார்.

