ஜூரோங் வெஸ்ட்டில் இந்த ஆண்டு பிற்பகுதியில் உடற் குறையாளர் தொழில்துறை மையம் தொடங்கப்படும்.
உடற்குறையாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதும் அனைத்துத் தரப்பினரையும் வேலையில் சேர்க்கும் நடைமுறைக்கு ஊக்கமூட்டுவதும் அந்த மையத்தின் நோக்கமாக இருக்கும்.
இந்த விவரங்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டன.
இந்த அறிவிப்பு இடம்பெறுவதற்கு முன்னதாகவே சில நிறுவனங்கள் உடற்குறையாளர்களை வேலையில் சேர்ப்பதற்கான முதல் முயற்சியைத் தொடங்கிவிட்டன.
எடுத்துக்காட்டாக, தளவாடப் போக்குவரத்து துறையில் பெரும் நிறுவனமாகத் திகழும் அமேசான், 'எஸ்ஜி எனேபல்' அமைப்புடன் சேர்ந்து சுமார் 20 உடற்குறையாளர்களை வேலையில் சேர்த்துள்ளது. எஸ்ஜி எனேபல் என்பது இயலாமை உள்ளோருக்கான நல்வாழ்வு அமைப்பாகும்.
அடுத்த மூன்றாண்டுகளில் உடற்குறையாளர்களை மேலும் வேலையில் சேர்க்கப் போவதாக நிறுவனம் உறுதி கூறி உள்ளது.
'யூனிக்லோ' என்ற ஆடை சில்லறை வர்த்தக நிறுவனம், சிங்கப்பூரில் செயல்படும் 28 கடைகளிலும் உடற்குறையாளர்கள் 42 பேரை வேலையில் அமர்த்தி இருக்கிறது.
உடற்குறையுடன் கூடிய இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து செயல்பட்டு அவர்களின் ஆதரவுடன் புதிய சூழ்நிலையைத் தழுவிக்கொள்கிறார்கள்.
இதனிடையே, 'நெக்ஸ்ட் (NeXT) கேரியர் கன்சல்டிங் குருப்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பால் ஹெங், உடற்குறையாளர்களை நிறுவனங்கள் வேலையில் அமர்த்த மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்று கருத்து கூறினார்.
"உடற்குறையாளர்களிடம் தேவைப்படக்கூடிய தேர்ச்சிகள் இருக்காது என்று முதலாளிகள் நினைக்கிறார்கள். அவர்களை வேலையில் சேர்த்தால் கூடுதலாகச் செலவாகும் என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
"இந்த விவகாரம் மனநிலையைப் பொறுத்த ஒன்று. வேலைஇடத்திலும் சரி, சமூகத்தில் பொதுவாகவும் சரி உடற்குறையாளர்கள் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறார்கள்.
"முதலாளிகள் நினைத்தால் முடியும் அவர்கள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். நிறுவனங்களுக்குப் பணம் ஈட்டுவது முக்கியமானது என்றாலும் எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய வளர்ந்த நாடாக ஆக நாம் விரும்பினால் அது போல நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.