முதலீட்டு மோசடிகள் மூலம் பணம் பறித்ததாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். முன்னாள் சக ஊழியர்களிடம் பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும் என ஆசைகாட்டி இவர் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஏழு மோசடிச் சம்பவங்களிலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய மோசடிகள் மூலம் பாதிக்கப்பட்டோர் $36,500க்கு மேற்பட்ட தொகையை இழந்ததாகக் கூறப்பட்டது.
நம்பகமான முதலீட்டு வாய்ப்பு என நம்பி 'பே நவ்' முறையின்கீழ் அவர்கள் ஆடவருக்குப் பணம் அனுப்பினர். உறுதியளித்தபடி பணம் ஏதும் கிடைக்கவில்லை என்றறிந்த பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர் என்று காவல்துறை கூறியது.
சென்ற ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதிக்கும் சென்ற மாதம் 17ஆம் தேதிக்கும் இடையே அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆடவரை அடையாளம் கண்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது. ஏமாற்றி மோசம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

