செய்திக்கொத்து

2 mins read
5a7a3139-9026-4b74-9149-ecc5f642d567
-

காசு கேட்டுப் பள்ளிவாசல் சென்றவர் கைவரிசையைக் காட்டினார்

முகமது ரஸாலி ரஹ்மது எனும் 42 வயது ஆடவருக்குப் பள்ளிவாசலில் திருடியதன் தொடர்பில் நேற்று ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எண் 34, ஜாலான் ஹாஜி அலியாசில் இருக்கும் அல்-ஹுதா பள்ளிவாசலுக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி சென்ற அந்த ஆடவர் நிதியுதவி கோரினார். நல்லெண்ண அடிப்படையில் $50 வழங்கிய பள்ளிவாசல் ஊழியர், அங்கு தொண்டூழியம் செய்தால் மேலும் நிதியுதவி கிடைக்கும் என்று கூறினார். பின்னர் நன்கொடைப் பெட்டியில் சேர்ந்திருந்த தொகையை எண்ணுவதற்கு உதவிசெய்த ரஸாலி பள்ளிவாசலின் தள அமைப்பைப் புரிந்துகொண்டார். மறுநாள் இரவு பள்ளிவாசலின் மதில்சுவர்மேல் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்த அவர், நன்கொடைப் பெட்டியில் இருந்து $120 திருடினார். மீண்டும் சென்ற ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அதேபோல் மதிலேறிக் குதித்து மொத்தம் $50 மதிக்கத்தக்க சில்லறை நோட்டுகளைத் திருடினார். கண்காணிப்புக் கேமராப் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட அவர், மறுநாள் கைது செய்யப்பட்டார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை: பயண உச்சநேரத்தில் சேவை தாமதம்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையில் நேற்று மாலை கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு ரயில்சேவை தாமதமானது.

ரயில் கோளாறு காரணமாக சேவையில் இடையூறு ஏற்பட்டிருப்பது குறித்து எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று மாலை 5.05 மணிக்கு டுவிட்டரில் தெரிவித்தது. பயண நேரம் 25 நிமிடங்கள் கூடுதலாகும் என அது குறிப்பிட்டது. கேல்டிகாட் ரயில் நிலையத்திற்கும் கரையோரப் பூந்தோட்ட ரயில் நிலையத்திற்கும் இடையே இலவசப் பேருந்துச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் கேல்டிகார்-ஆர்ச்சர்ட் நிலையங்களுக்கு இடையே இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்படுவதாகவும் பயண நேரம் 15 நிமிடம் கூடும் என்றும் நிறுவனம் கூறியது. இரவு 7.21 மணிக்கு ரயில்சேவை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் இலவசப் பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியது. சேவை பாதிப்பு குறித்து அது வருத்தம் தெரிவித்தது.