பொருளியல் 1.9 விழுக்காடு வளரும் என்று நிபுணர்கள் கணிப்பு
சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் சற்று உயர்த்தி உள்ளனர்.
அதேபோல அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சியில் வேகம் காணப்படு வதால் அந்த ஆண்டில் 2.5 விழுக்காடு உயரக்கூடும் என்றும் அவர்கள் கணித்திருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
ஆணையம் நடத்திய காலாண்டு ஆய்வில் பங்கேற்று கருத்துக் கூறிய 21 பொருளியல் நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவின் வளர்ச்சி வேகமெடுக்கும் என்று நம்புகின்றனர்.
கொள்கை தளர்வு மற்றும் பொருளியல் மீட்பு நடவடிக்கைகளும் அந்த வேகத்திற்குக் காரணம் என்றும் கூறும் அவர்கள் சீனாவின் வளர்ச்சியோடு எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் சிறந்த உலக வளர்ச்சியும் வேகமாக மீட்சி கண்டு வரும் தொழில்நுட்பத் துறையும் சிங்கப்பூரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றனர்.
பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இவ்வாண்டின் இடைநிலை பொருளியல் வளர்ச்சி 1.9 விழுக்காடாக இருக்கும் என்று அவர்கள் முன்னுரைத்தனர்.
அந்த வளர்ச்சி விகிதம் 1.8 விழுக்காடு என்று டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட முந்திய காலாண்டு ஆய்வறிக்கையில் அவர்கள் கணித்து இருந்தனர்.
அவர்களின் மதிப்பீடு இவ்வாண்டின் வளர்ச்சி 0.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று அரசாங்கம் வெளியிட்ட விரிவான முன்னுரைப்பை ஒத்து உள்ளது.
பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு இவ்வாறிருக்க, இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பணவீக்கம் 5 விழுக்காடாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். டிசம்பர் மாத ஆய்வில் பணவீக்க விகிதம் 5.2 விழுக்காட்டுக்குச் செல்லும் என்று அவர்கள் கணித்திருந்தனர். இருப்பினும், மூலாதாரப் பணவீக்க விகிதத்தை 4 விழுக்காடு என்பதிலிருந்து 4.1 விழுக்காட்டுக்கு அவர்கள் உயர்த்தி உள்ளனர்.
ஒட்டுமொத்த பணவீக்கத்தில் தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளைத் தவிர்த்து மூலாதாரப் பணவீக்கம் மதிப்பிடப்படுகிறது.
அதேநேரம், இவ்வாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 5.5 விழுக்காட்டுக்கும் 6.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கணித்துள்ளது. அதேபோல மூலாதாரப் பணவீக்க விகிதம் 3.5 விழுக்காடு முதல் 4.5 விழுக்காடு வரை இருக்கும் என்றும் அது முன்னுரைத்து உள்ளது.
ஆயினும் புவிசார் அரசியல் பதற்றங்களும் பணவீக்க அழுத்தங்களும் இரு பெரிய அபாயங்கள் என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 56% பேர் கூறியுள்ளனர்.

