32 மாதங்களில் முதல் முறையாக விற்கப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை சரிவு
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலைகள் 31 மாதங்கள் உயர்வு கண்டு ஒருவழியாக பிப்ரவரியில், நிலைப்பட்டன. ஆனால் இதை சொத்துச் சந்தை தணிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சொத்துச் சந்தை இணையத் தளங்களான 99.co மற்றும் எஸ்ஆர்எக்ஸ் இரண்டும் நேற்று வெளியிட்ட தரவின்படி, பிப்ரவரியில் குறைவான வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின. வீட்டு விற்பனை 28.2% சரிந்து 1,849 வீடுகளாயின. ஜனவரியில் அது 2,575 வீடுகளாக இருந்தன என்று தெரியவந்தது.
முதிர்ச்சியடைந்த மற்றும் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் உள்ள வீட்டு விலைகள் பிப்ரவரியில் 0.1% என மிகச் சிறிய அளவில் குறைந்தது. அதன் காரணமாக, அதிகம் கைமாறும் நான்கறை வீட்டு விலைகள் அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சமமாக இருந்தது.
ஆண்டு அடிப்படையில் வீட்டு விலைகள் 8.3% ஏற்றம் கண்டன.
பிப்ரவரியில் வீட்டு பரிவர்த்தனை குறைந்ததற்குக் காரணமாக, ஜனவரியில் வந்த சீனப் புத்தாண்டு விழாக்கால நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றனர், சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள். அவர்களில் பெரும்பாலோர் தற்போது வீட்டு விலைகள் நிலைப்பட்டு, மார்ச்சில் வீட்டு விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
வரும் ஆகஸ்ட் பிடிஓ வீடுகள் விற்பனையின்போது, முதல் முறையாக வீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்படும் வீட்டை நிராகரித்தால் அவர்கள் இரண்டாம்நிலை வாங்குபவர்களாக வகைப்படுத்தப்படுவார்கள்.
தற்போது, இரண்டு முறை தங்களுக்குக் கொடுக்கப்படும் வீட்டை நிராகரித்தால் அவர்கள் இரண்டாம்நிலை வாங்குபவர்களாக வகைப்படுத்தப்படுவார்கள்.
பிப்ரவரியில் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 24க்குக் குறைந்தது. அந்த எண்ணிக்கை ஜனவரியில் 40 ஆக இருந்தது.
குறைந்தது மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 24 வீடுகள், பிப்ரவரியில் விற்கப்பட்ட மொத்த மறுவிற்பனை வீடுகள் விகிதத்தில் 1.3% ஆக இருந்தது.
பிப்ரவரியில் விற்கப்பட்ட மில்லியன் வெள்ளி மதிப்புள்ள வீடுகளில் ஐந்து, தோ பாயோவிலும் நான்கு, குவீன்ஸ்டவுனிலும் மூன்று, உட்லண்ட்ஸ் மற்றும் மத்திய பகுதியிலும் இருந்தன.
ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட மறுவிற்பனை வீடு 'த பின்னக்கல்@டக்ஸ்டன்' குடியிருப்பின் 22வது மாடிக்கும் 24வது மாடிக்கும் இடைப்பட்ட ஓர் ஐந்தறை வீடு. அது $1.34 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

