டிபிஎஸ் குழுமத்தின் லாபமும் பங்கு வருவாயும் கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டிய நிலையில் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தாவின் ஆண்டு வருமானம் 13.2 விழுக்காடு அதிகமாகி $15.4 மில்லியனாகி உள்ளது.
2022இல் திரு குப்தாவுக்கு $1.5 மில்லியன் சம்பளமும் $5.77 மில்லியன் ரொக்க போனசும் சேர்த்து, ஒத்திவைக்கப்பட்ட ரொக்கமும் பங்குகளுமாக $8.04 மில்லியன் வழங்கப்பட்டது.
$80,529 மதிப்பிலான மன்ற உறுப்பியம், வாகனம், ஓட்டுநர் உள்ளிட்ட ரொக்கமில்லா அனுகூலங்கள் அவரது சம்பளத்தின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்டன.
வங்கி நேற்று வெளியிட்ட ஆண்டறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
டிபிஎஸ் வங்கி அதன் லாபம் 20 விழுக்காடு உயர்ந்து 8.19 பில்லியன் ஆனது என்று கடந்த மாதம் கூறியிருந்தது. வட்டி விகித உயர்வால் வங்கியின் வருமானம் கூடியது அதற்கு முக்கிய காரணம். 2021ல் பங்குகள் வழி கிடைத்த வருவாய் மூலம் 12.5 விழுக்காடு லாபம் ஈட்டிய டிபிஎஸ் சென்ற ஆண்டு 15 விழுக்காடு லாபம் பெற்றது.
திரு பியுஷ் குப்தாவின் ஒட்டுமொத்தச் சம்பளம் 2021ல் $13.6 மில்லியனாக இருந்தது. 2020ல் கொவிட்-19 சூழலில் அவர் பெற்ற $9.2 மில்லியன் சம்பளத்தைவிட அது 48 விழுக்காடு உயர்வாகும்.
ஆண்டறிக்கையில் கூட்டாக எழுதிய கடிதத்தில் டிபிஎஸ் வங்கித் தலைவர் பீட்டர் சியாவும் திரு குப்தாவும் 2022ஐ வங்கிக்கு பெரும் வெற்றியைத் தந்த ஆண்டு என்று வருணித்தனர்.