லாசரஸ் தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறுவீடுகள் சுற்றுப்பயணிகளுக்கு சேவை வழங்கும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் சென்ற மாதம் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறைந்த கரியமில வாயு வெளியேற்றும் இந்தச் சிறுவீடுகளில் தங்குவதற்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியில் இருந்து பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இவற்றை நிர்வகிக்கும் 'பிக் டைனி' நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கெனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி, தைவான், மலேசியா ஆகியவற்றில் இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
தொடக்கத்தில் சலுகைக் கட்டணமாக ஓர் இரவு தங்குவதற்கு $199 வாடகை செலுத்தினால் போதும்.
இன்னும் வழக்கமாக வசூலிக்கப்படும் வாடகைத் தொகை அறிவிக்கப்படவில்லை.
இத்தகைய ஐந்து சிறுவீடுகள் வருகையாளர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றும் 150 முதல் 170 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன.
இவற்றில் இரண்டு சிறுவீடுகளில் செல்லப் பிராணிகளுக்கும் அனுமதி உண்டு.
இதுவரை 600க்கு மேற்பட்டோர் இச்சிறுவீடுகளுக்கு முன்பதிவு செய்வது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிறுவீடுகளில் பெரும்பாலும் சூரியசக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படும்.
பெரியவர்கள் மூன்று பேர் அல்லது இரண்டு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் ஒரு வீட்டில் தங்க இயலும்.
சமையலறை, குளிரூட்டி, இலவச இணைய வசதி ஆகியவையும் உண்டு.
ஜூன் மாதத்தில் இருந்து கட்டங்கட்டமாக சிறு கடை, நீர் விளையாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும்.
மரினா சவுத் பியரில் இருந்து செயிண்ட் ஜான்'ஸ் தீவிற்குப் படகு மூலம் சென்று பின்னர் அங்கிருந்து பாலம் வழியாக லாசரஸ் தீவிற்குச் செல்ல இயலும்.
முன்பதிவு செய்ய விரும்புவோர் எஸ்கேப்அட்லாசரஸ்.காம் என்ற இணையத்தளத்தை நாடலாம்.

