வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்துகொண்டால் கடன் வழங்கப்படும் என்று டெலிகிராம் செயலி மூலம் அனுப்பப்பட்ட தகவலைப் படித்த பிறகு, வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அதுதொடர்பான விவரங்களைப் பிறரிடம் அனுப்பி அதைப் பயன்
படுத்த அனுமதித்த குற்றத்தை பதின்மவயது ஆடவர் ஒருவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது யுஓபி வங்கிக் கணக்கை மோசடிக் கும்பல் பயன்படுத்தி $249,000க்கும் அதிகமான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாக நம்பப்படுகிறது.
இதற்காக 19 வயது மதன ராஜ் சிங் பல்பீர் சிங் (படம்) மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் டெலிகிராம் செயலி மூலம் அனுப்பிவைக்கப்பட்ட அந்தத் தகவலுக்கு சிங் பதில் அளித்ததாக காவல்துறை கூறியது.
அதே மாதத்தில் யுஓபி வங்கிக் கணக்கைத் திறந்து அவர் மட்டுமே அந்தக் கணக்கைப் பயன்படுத்துபவர் என்று வங்கியை ஏமாற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
வங்கிக் கணக்கைத் திறந்ததும் இணையம் மூலம் வங்கிச் சேவைக்கான மறைச்சொல்லை அடையாளம் தெரியாதவரிடம் சிங் ஒப்படைத்தார்.
இந்நிலையில், சட்டதீரியிலான உதவியைப் பெற விரும்புவதாக சிங் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிங்கிற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வங்கியின் கணினிக் கட்டமைப்பை அனுமதி பெறாத ஒருவர் பயன்படுத்த உதவிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மோசடிக் குற்றங்கள் புரிபவர்களுக்கு உடந்தையாக இருக்க சிலர் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கின்றனர். ஆனால் இதை நிரூபிப்பது சவால்மிக்கது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளைத் திருத்துவது குறித்து உள்துறை அமைச்சு பரிசீலித்து வருவதாக கடந்த மாதம் எழுத்துபூர்வ பதில் அளித்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்க சட்டப்பிரிவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
"மோசடி குற்றங்களைப் புரிபவர்களுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்க எளிதில் ரொக்கம் பெறக்கூடிய வாய்ப்புகள், விளம்பரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
"சிங்பாஸ், வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்தால் பணம் தரப்படும் என யாராவது சொன்னால் அதை உடனடியாக நிராகரித்துவிட வேண்டும்.
"மோசடிக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட சிங்பாஸ், வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு பொறுப்பானவர்கள் என்று எடுத்துக்கொள்ளப்படும்," என்று காவல்துறை தெரிவித்தது.
357 பேரிடம் விசாரணை
இதற்கிடையே, மோசடிக் குற்றங்கள், மோசடிக் கும்பல்களிடம் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்தது தொடர்பாக 357 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்துகிறது.
1,000க்கும் அதிகமான குற்றச் செயல்கள் தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
சந்தேக நபர்கள் 16
வயதுக்கும் 75 வயதுக்கும் உட்பட்டவர்கள். கடந்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடிக் குற்றங்கள் மூலம் $4 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

