கரிமக் கணக்கீடு, குறைப்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்
அரசாங்கம், நிறுவனங்கள் காரணமாக ஏற்படக்கூடிய 'வகை 3' கரிமக்கழிவுகளைக் கணக்கிடவும் அவற்றைக் குறைக்கவும் விரைவில் செயல்களைத் தொடங்க ஆயத்தமாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டிற்கான தன்னுடைய சுற்றுச்சூழல் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் பொதுத் துறையின் முயற்சிகளை முன்னேற்றங்கள், திட்டங்களை விவரிக்கும் ஆண்டறிக்கையை வெளியிடுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது.
GreenGov.sg என்ற அந்த அறிக்கையின்கீழ் அரசாங்கம் வகை 1, வகை 2 கரிமக் கழிவு விவரங்களை வெளியிடத் தொடங்கும். அதோடு மின்சார, தண்ணீர் பயனீட்டையும் அனைத்துலக தர ஏற்பாடுகளுக்கு இணங்க அது வெளியிடும்.
இருந்தாலும்கூட வகை 3 கரிமக் கழிவுகளை வெளியிடுவதற்கான திட்டம் இப்போதைக்கு இல்லை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
வகை 3 கரிமக் கழிவுகள் என்பவை ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய மறைமுக கரிமக் கழிவுகள் ஆகும்.
எடுத்துக்காட்டாக எண்ணெய், எரிவாயு நிறுவனங்களால் வெளியாகக்கூடிய கரிமக் கழிவுகளில் பெரும்பாலானவை வகை 3ஐ சேர்ந்தவை.
அதாவது அத்தகைய நிறுவனங்களிடம் இருந்து விமான நிறுவனங்கள், மோட்டார் வாகனங்கள், தொழில்துறை ஆலைகள், எரிபொருளை வாங்குகின்றன. பிறகு அவை கரிமக் கழிவுகளை வெளியாக்குகின்றன.
ஒரு நிறுவனம் நேரடியாக வெளியிடும் கரிமக் கழிவுகள் வகை 1ன் கீழ் வரும். வகை 2 கரிமக் கழிவுகள் என்பவை மின் உற்பத்தி நிலையங்களிடம் இருந்து நிறுவனம் கொள்முதல் செய்கின்ற மின்சாரம் போன்றவற்றின் மூலம் ஏற்படக்கூடிய மறைமுக கரிமக் கழிவாகும்.
இந்த மூன்று வகை கரிமக் கழிவுகளில் வகை 3 கழிவுகள்தான் மிக அதிக அளவிலானவை. சராசரியாக ஒரு நிறுவனம் வெளியிடும் கரிமக் கழிவுகளில் வகை 3 கழிவுகள் 75% அளவு உள்ளன என்று 'உலக ஆய்வுப் பயிலகம்' என்ற உலகளாவிய லாபநோக்கற்ற ஆய்வு அமைப்பு தெரிவிக்கிறது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் அண்மையில் நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள், அரசாங்கம் வகை 3 கரிமக் கழிவுகளைக் கணக்கிடுவதற்கும் அவற்றைக் குறைப்பதற்கும் உதவும் முயற்சிகளைத் தொடங்குவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கூடியவை என்று வல்லுநர்கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

