வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் இந்தியா வின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் நேற்று புதுடெல்லியில் பேச்சு நடத்தினர்.
சிங்கப்பூர்-இந்தியா அமைச்சர்நிலை வட்டமேசை பேச்சை முன்னெடுத்துச் செல்வது பற்றி தாங்கள் விவாதித்ததாக இந்திய அமைச்சர் டுவிட்டரில் கூறினார்.
முன்னதாக, சிங்கப்பூர் அமைச்சரும் இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானும் சிங்கப்பூர்-இந்தியா கணினி நிரலோட்டம் 2023 போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
தேர்ச்சி மேம்பாட்டில் தொடர்புகளைப் பலப்படுத்துவதைப் பற்றி இருவரும் பேசினர்.
சிங்கப்பூர் அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், முதலீட்டைப் பெருக்குவதன் தொடர்பில் இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலுடன் பேச்சு நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
சிங்கப்பூர்-இந்தியா கணினி நிரலோட்டம் 2023 நேற்று தெடங்கியது.
இரு நாடுகளையும் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பார்கள் சேர்ந்து செயல்பட்டு முக்கியமான பல கணினி மென்பொருள், வன்பொருள் சவால்களுக்குத் தீர்வுகளைக் காண்பார்கள்.
நிரலோட்ட தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு கான், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட ஒத்துழைப்பில் தேர்ச்சி மேம்பாடு என்பது மிக முக்கியமான ஒரு துறை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஒன்றாகச் சேர்ந்து செயல்படுவதன் மூலம் ஒருவர் மற்றொருவரின் சிந்தனை செயல்முறைகள் மூலம் பலவற்றையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் விளக்கினார்.
இதன்மூலம் தேர்ச்சிகள் கூர்மையடையும்; போட்டித்திறன் வலுவடையும். சிறந்த வேலைகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சின்கீழ் செயல்படும் சிங்கப்பூர்-இந்தியா பங்காளித்துவ அலுவலகத்தை அமைச்சர் திரு கான் சுட்டிக்காட்டினார்.
அந்த அலுவலகம், இந்தியாவின் தொழில்துறை தளவாடப் போக்குவரத்து பயிலகக் கூட்டமைப்பையும் சிங்கப்பூர் தளவாடப் போக்குவரத்துச் சங்கத்தையும் ஒருங்கே கொணர்ந்து இரண்டும் சேர்ந்து இரு அனைத்துலக கூட்டு சான்றிதழ் படிப்பைப் போதிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-சிங்கப்பூர் இரு நாடுகளின் கல்வி நிலையங்களும் தொழிற்துறை சங்கங்களும் சேர்ந்து தேர்ச்சிமிகு செயல்திட்டங்களை உருவாக்கி அதன்மூலம் எதிர்கால தேவைகளை ஈடுசெய்ய முயல வேண்டும் என திரு கான் வலியுறுத்தினார்.
இரு நாடுகளின் பொருளியல்களில் புத்தாக்கத்தை மேம்படுத்துவதில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் நிரலோட்டம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர்-இந்திய தொழில்நுட்ப புதிய நிறுவனங்கள் பங்கெடுத்துக்கொண்டு தங்களுடைய தீர்வுகளை முன்வைக்கும்.
தலைசிறந்த தீர்வுகளைக் காண்பது அதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட்டில் நடக்கும் நிரலோட்ட இறுதிப் போட்டியில் எல்லா தீர்வுகளும் தாக்கலாகும். அதைத் தான் ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூர்-இந்தியா நிரலோட்டப் போட்டி இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட மாணவர்கள், புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே புத்தாக்கத்திலும் தொழில் முனைப்பிலும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு மேலும் ஆதரவு அளிக்கும் வகையில் நடக்கிறது.
இது இந்தத் தொடரில் 3வது போட்டியாகும்.

