அமெரிக்காவில் அண்மையில் இரு வங்கிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்தச் சூழலில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூரின் வங்கி முறை தொடர்ந்து மிக வலுவாக இருந்து வருகிறது என்றும் அது மீள்திறனுடன் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது என்றும் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூர் வெள்ளி நாணயச் சந்தையும் அந்நியச் செலாவணி சந்தையும் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு வருவதையும் அது சுட்டியது.
உள்நாட்டு நிதி முறையை அணுக்கமாக ஆணையம் கண்காணித்து வருகிறது.
அது போலவே அனைத்துலக நிலவரங்களையும் அது கண்காணித்து வருகிறது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடன் ஆணையம் அணுக்கத் தொடர்பில் இருந்து வருகிறது.
அனைத்துலக நிலவரங்கள் காரணமாக சிங்கப்பூரின் புதிய நிறுவனங்களில் ஏற்படக்கூடிய தாக்கங்களை ஆணையம் இதன் மூலம் மதிப்பிட்டு வருகிறது.
அத்தகைய தாக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு எதுவும் இல்லை என்பது தெரியவந்து இருக்கிறது.
தானும் இதர அரசாங்க அமைப்புகளும் நிலவரங்களை அணுக்கமாக கண்காணித்து வரப்போவதாகவும் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் அண்மையில் நொடித்துப்போன சிலிக்கன் வேலி பேங்க், சிங்நேச்சர் பேங்க் ஆகியவை காரணமாக சிங்கப்பூர் வங்கி முறைக்கு குறிப்பிடத்தக்க அளவுக்குத் தாக்கம் எதுவும் இல்லை என்று ஆணையம் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் வங்கிகள் வலுவான மூலதனத்தைக் கொண்டவை. வட்டி விகிதத்திற்கும் இதர இடர்களுக்கும் எதிராக அவை காலக்கிரம முறைப்படி நெருக்குதல் சோதனைகளை நடத்தி வருகின்றன.
சிங்கப்பூர் வங்கிகளின் பண பலம் வலுவாக இருக்கிறது. சிங்கப்பூர் வங்கிகளுக்கு நிலையான பலமுனைப்படுத்தப்பட்ட நிதி அடித்தளம் இருக்கிறது என்பதையும் ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்தச் சாதக அம்சங்கள் காரணமாக சிங்கப்பூர் வங்கி முறை அனைத்துலக நிதி நிலவரங்கள் மூலம் ஏற்படக்கூடிய தாக்கங்களைச் சமாளித்துவிடும் நிலையில் உள்ளன என்றும் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்க ஒழுங்குமுறை அதிகாரிகள், சிலிக்கன் வேலி வங்கியை மூடிவிட்டார்கள். அது 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு ஆகப் பெரிய வங்கி பிரச்சினையாகத் தெரிகிறது.
புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து வந்த சிலிக்கன் வேலி வங்கிக்கு US$209 பில்லியன் சொத்து இருந்தது.
2022 முடிவில் அதனிடம் ஏறக்குறைய US$175.4 பில்லியன் வைப்புத் தொகை இருந்தது.
அதேபோல, நியூயார்க்கில் செயல்படும் சிக்நேச்சர் வங்கியையும் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மூடிவிட்டனர்.
சிலிக்கன் வேலி வங்கி செயல்பட இயலாத அளவுக்கு தோற்றுப் போனதை அடுத்து அதை மூடிவிட்ட அதிகாரிகள் அதில் பணம் போட்டு வைத்திருந்த அனைவருக்கும் கூடியவிரைவில் போட்ட பணம் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தனர்.
அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அடுத்த அறிவிப்பாக சிக்நேச்சர் வங்கியும் நொடித்துப்போன விவகாரம் இடம்பெற்றது.
இந்த வங்கிக்கு $110 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துகள் இருக்கின்றன. சிங்நேச்சர் வங்கி நொடித்துப் போன சம்பவம், அமெரிக்க வங்கி வரலாற்றில் இத்தகைய ஆகப் பெரிய மூன்றாவது சம்பவமாக இருக்கிறது.

