சிங்கப்பூரில் புதிய வகை சிற்றின கெளுத்தி மீன் கண்டுபிடிப்பு
சிங்கப்பூரில் ஒரே ஒரு மென்னீர் சதுப்புநிலப் பகுதிதான் இன்னமும் எஞ்சி இருக்கிறது. அதில் சேற்றில் வாழக்கூடிய ஒரு குறிப்பிட்ட வகை சிற்றினத்தைச் சேர்ந்த கெளுத்தி மீன் (படம்) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அறிவியல் அறிஞர்கள் 30 ஆண்டு காலம் நடத்தி வந்த ஆய்வுகளின் விளைவாக அந்தச் சிற்றினம் கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறிஞர்கள் கண்டுபிடித்துள்ள கெளுத்தி மீன் சிற்றினம் 'என்கிளோகிளாரியாஸ் கெளியோட்ஸ்' என்று குறிப்பிடப்படுகிறது. இது ஆசியாவில் அவ்வளவாக பிரபலமாகாத ஒன்று. இந்த வகை கெளுத்தி மீனின் உடல் நீண்டு இருக்கும். காற்றைச் சுவாசிக்கும். மீசைகள் நீளமாக இருக்கும்.
புதிய வகை கெளுத்தி சிற்றினம், மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பகுதியில் ஓடும் காட்டு ஓடையில் முதன்முதலாக 2022 ஆகஸ்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் தேசிய அறிவியல் அரும்பொருளகத்தின் அறிவியல் துறை மீன் காப்பாளர் டாக்டர் டான் ஹியோக் ஹுய் தெரிவித்தார்.
பராமரிப்பாளருக்கான திட்டம்: 10க்கும் மேற்பட்டோர் பலன்
நினைவாற்றல் இழப்பு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள முதியோரில் சிலர் குறிப்பாக பிற்பகல் நேரத்தில் வினோதமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. அந்த நிலை இரவிலும் நீட்டிப்பதுண்டு.
தங்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவர்கள் அடம்பிடிப்பார்கள். இதுதான் வீடு, வீட்டில்தான் இருக்கிறீர்கள் என்று பராமரிப்பாளர், உறவினர்கள் சொன்னால் அவர்களிடம் கோபப்படுவார்கள். சில நேரங்களில் வீட்டைவிட்டு ஓடிவிடுவார்கள்.
மறுநாள் வேறுவிதமான பிரச்சினையைக் கிளப்புவார்கள். ஓய்வின்றித் தவிப்பார்கள், சந்தேகப்படுவார்கள், கோபப்படுவார்கள், கவனமின்றி இருப்பார்கள். இத்தகைய நபர்கள் வீட்டில் இருப்போரின் தூக்கத்தை, நிம்மதியைக் கெடுத்துவிடுவார்கள். பராமரிப்பாளரைப் பாடாய்ப்படுத்திவிடுவார்கள்.
இத்தகைய குறைபாடு உள்ளவர்களைப் பராமரிப்போருக்கு இரவில் கொஞ்சம் நிம்மதி நிவாரணம் வழக்கும் வகையில் ஒரு செயல்திட்டம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
வான்கார்ட் உட்லண்ட்ஸ், பீஸ்ஹெவன் தாதிமை இல்லம், செயிண்ட் ஜோசஃப் இல்லம் ஆகிய மூன்றும் 2019ஆம் ஆண்டு முதல் வார நாட்களில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர சேவையை வழங்குகின்றன. இதன் மூலம் 10க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பலன் அடைந்துள்ளனர்.
கொவிட்-19 காரணமாக நிறுத்தப்பட்ட இந்தச் சேவை, 2021 பிற்பகுதி முதல் செயல்பட தொடங்கி 2022 அக்டோபர் முதல் முற்றிலும் செயல்பட்டு வருகிறது.
பள்ளிக்கூடப் பேருந்து 'சி.பி.'
உரிமம் விலை $30,000
சிங்கப்பூரில் ஓடும் சில பழைய பள்ளிக்கூடப் பேருந்துகள், 'சி.பி.' என்ற உரிமம் எண் தகட்டைக்கொண்டு இருக்கும். அத்தகைய பேருந்துகளுக்கு வாகன உரிமைச் சான்றிதழை (சிஓஇ) வாங்க வேண்டாம்.
சி.பி. உரிமம் வழங்கும் நடைமுறை எந்த ஆண்டில் நிறுத்தப்பட்டது என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் அது நின்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போது அவை கொடுக்கப்படுவதில்லை. என்றாலும் அதை மறுவிற்பனை சந்தையில் வாங்கலாம். அது தலா $20,000 முதல் $30,000 வரை விலைக்கு விற்கப்படுகிறது.
சி.பி. உரிமம் விலை கூடியதாகத் தெரியவில்லை என்று இந்தத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
பள்ளிக்கூடப் பேருந்துக்குச் சட்டபூர்வமான ஆயுள் 20 ஆண்டுகள். அதற்குப் பிறகு அதை ஓட்டக்கூடாது. என்றாலும் புதிதாக ஒரு பேருந்தை வாங்கி அதற்கு பழைய சி.பி. உரிமத்தைப் பயன்படுத்தி மேலும் 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். வாகன உரிமைச் சான்றிதழ் வாங்க வேண்டாம்.
சிங்கப்பூரில் ஓடும் மொத்த பேருந்துகள் 17,876. அவற்றில் 1,825 பள்ளிக்கூடப் பேருந்துகள் என்பது சென்ற ஆண்டு நிலவரம். பள்ளிக்கூடப் பேருந்துகளில் 1,118 பேருந்துகள் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. மற்றவற்றைத் தனிப்பட்டவர்கள் ஓட்டுகிறார்கள்.

