மீடியாகார்ப் நிறுவனத்தின் 'மீகனெக்ட்' கணக்குகளைத் தவறான முறையில் கையாண்ட குற்றத்துக்காக 22 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதியன்று 14,000 மீகனெக்ட் கணக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அடையாளம் தெரியாத வெளி நபர் ஒருவர் அவருக்குச் சொந்தமில்லாத மீகனெக்ட் கணக்குகளைப் பயன்படுத்தியதால் அந்தக் கணக்குகளின் உரிமையாளர்கள் தங்கள் மறைச்சொல்லை மாற்ற வேண்டும் என்று கடந்த மாதம் 23ஆம் தேதியன்று மீடியாகார்ப் அறிக்கை வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்களுக்கு மீடியாகார்ப் தகவல் தெரிவித்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையிடம் அது புகார் செய்தது. மீடியாகார்ப்பின் கட்டமைப்பிலிருந்து மறைச்சொற்கள் கசியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதற்கோ அல்லது வெளியிடப்பட்டதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. கட்டணம் செலுத்தும் முறை குறித்த விவரங்களும் பாதிப்படையவில்லை என்று மீடியாகார்ப் கூறியது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மீகனெக்ட் கணக்குகளைத் தவறான முறையில் பயன்படுத்திய நபரை அடையாளம் கண்டனர். அவர் இம்மாதம் 9ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

