பெற்றோர் இருவரும் சிறையில் இருந்தபோது, அவர்களின் பெண் பிள்ளையை வளர்க்க முன்வந்த வளர்ப்புப் பெற்றோரே இப்போது எட்டு வயதாகும் அந்தச் சிறுமியைத் தொடர்ந்து வளர்க்கலாம் என்று குடும்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த முடிவை அச்சிறுமியின் உண்மையான தந்தை ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
அச்சிறுமி யாரிடமிருந்தால் நன்றாக இருப்பார் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆராய்ந்த பிறகு, சிறுமியை இதுவரை வளர்த்தவர்களிடம் இருப்பதுதான் அவரது நல்வாழ்வுக்குச் சிறந்தது என்று முடிவெடுத்தது.
அதனையொட்டி, குடும்ப நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது.
போதைப் பொருள் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் உண்மையான தந்தை இப்போது தனது பிள்ளைக்கு உரிமை கொண்டாடி, வழக்கு தொடுத்துள்ளார்.
தனது தீர்ப்பு குறித்து எழுத்துபூர்வமாக விளக்கமளித்த மாவட்ட நீதிபதி ஜேசன் கேபிரியல் சியாங், "இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவல்ல. சிறுமியை வளர்ப்பதில் வளர்ப்புப் பெற்றோர் காட்டிய அர்ப்பணிப்பையும் அக்கறையையும் என்னால் உணர முடிந்தது.
"அதே நேரத்தில், உண்மையான தந்தையின் நிலையும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. பிள்ளையை வளர்க்கும் பொருட்டு, அவர் தனது கடந்தகாலத் தவறுகளை உணர்ந்து போதைப் பழக்கத்திலிருந்து விலகியிருக்க அவர் காட்டிய கடப்பாட்டையும் நான் பாராட்டுகிறேன். ஆனால் இங்கு சிறுமியின் சிறந்த நல்வாழ்வுதான் முக்கிய மாகக் கருதப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது," என்றார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உண்மையான தந்தை மேல்முறையீடு செய்துள்ளார்.
முப்பது வயதுகளில் உள்ள வளர்ப்புப் பெற்றோர் இருவருக்கும் சொந்தப் பிள்ளைகள் இல்லை. 2014ஆம் ஆண்டில் அச்சிறுமி பிறக்கும்போது அவரது உண்மையான தாயார் சிறையில் இருந்தார். ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது அவர் வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன் பிறகு, அந்த வளர்ப்புப் பெற்றோர் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மற்ற இரு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றனர்.