பட்டக்கல்வி மாணவர்களுக்கும் விமானிகளுக்கும் பயனளிக்கும் புதிய முயற்சி
ஆ. விஷ்ணு வர்தினி
வளர்ச்சியை எதிர்நோக்கி உள்ள சிங்கப்பூரின் வான்பயணத் துறைக்கு சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டங்கள் கூடுதலான மாணவர்களையும் விமானத் துறையாளர்களையும் இனி தயார்படுத்தும்.
இவ்வாண்டு முதல் விமானப் போக்குவரத்து நிர்வாக இளநிலைப் பாடமும் நிர்வாகத்தில் முதுநிலைப் பாடமும் அறிமுகமாகின்றன.
முறையே, இளங்கலைப் பட்டக்கல்வி மாணவர்களுக்கும் விமானிகளுக்கும் ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும் இவ்விரு பாடங்களும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'சிங்கப்பூர் விமானப் பயிற்சிக் கல்லூரியுடன்' இணைந்து வழங்கப்படுகின்றன.
வரும் ஜூலையில் இணையும் பல்கலைக்கழக புகுமுக மாணவர்கள் இந்த துணைப்பாடத்தை தேர்ந்தெடுக்கலாம். ஐம்பது மாணவர்கள் இப்பாடத்தை இவ்வாண்டு மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 200,000 துறையாளர்களை உள்ளடக்கி இருக்கும் நமது வான்பயணத் துறை எதிர்வரும் 20 ஆண்டுகளில் 126% வளர்ச்சி காணும் என கணிக்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறை தற்சமயம் 5% பங்கும் வகிக்கிறது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்படவிருக்கும் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையமும் இத்துறையை மேலும் விரிவுபடுத்தும்.
இந்நிலையில், புது வாய்ப்புகளை மாணவர்கள் கைப்பற்ற வகைசெய்வதோடு, விமானத்துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாடங்கள் ஓராண்டு காலமாகத் திட்டமிடப்பட்டு வந்ததாக தெரிவித்தார் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக தலைமை பேராசிரியர் திரு டான் டாய் யோங்.
நேற்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தொடக்க நிகழ்வில் இரு பாடங்களும் அறிவிக்கப்பட்டன. கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இதில் கலந்துகொண்டார்.
தகவல் தொழில்நுட்பத் திறன்கள், தானியக்கம், இயந்திர இயக்கமுறை முதலிய திறன்களை இப்பாடங்கள் மாணவர்களிடத்தில் கற்பிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பின் முடிவில் மாணவர்கள் ஆளில்லா வானூர்தி ஓட்டுநர் உரிமமும் பெறுவர். இதற்கான பயிற்சியில் கைகொடுக்க மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் பல்கலைக்கழகம் புகுத்தியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் விமான நிர்வாகக் குழுவினருக்குமான முதுகலை படிப்பு வேலையிடச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு திறன் மேம்பாட்டை முன்னிலைப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் சமூக அறிவியல் விரிவுரையாளர்களுடன், சிங்கப்பூர் ஏர்லைன்சின் மூத்த ஊழியர்களும் இணைந்து இப்பாடத்தைக் கற்பிப்பர்.
ஏறத்தாழ ஓராண்டிலிருந்து 18 மாதங்கள் நீடிக்கிறது இந்த முதுகலை பாடத்திட்டம். பணியில் உள்ளோரை வரவேற்பதால், இத்திட்டத்தில் இணைவோர் படிப்பை முடிக்க நான்கு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் நீக்குப்போக்கான ஏற்பாடுகளும் உண்டு.