எலி, பல்லிகளுக்கான பசைப்பொறிகளில் எலி, பல்லியைத் தவிர பறவைகள், வனவிலங்குகள் என பலவும் வந்து சிக்கிக்கொள்கின்றன என்று ஏக்கர்ஸ் எனப்படும் விலங்குநல ஆய்வு, கல்விச் சங்கத்தின் இணைத் தலைமை நிர்வாகி அன்பரசி பூபாலன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இதுபோன்ற 85 சம்பவங்கள் பற்றி ஏக்கர்ஸ் அமைப்புக்குத் தகவல் கிடைத்தது. அது ஒரு நாளைக்கு ஒரு சம்பவத்துக்குச் சமம்.
2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை 985 சம்பவங்கள் பற்றி ஏக்கர்ஸுக்கு தகவல் கிடைத்தது என்றார் திருவாட்டி அன்பரசி.
கடந்த ஆண்டுகளில் பொறியில் மாட்டிக்கொண்ட விலங்குகளில் 75%, மீன்கொத்தி பறவைகள், புறாக்கள், மைனா பறவைகள், உடும்புகள், பாம்புகள், தவளைகள், அணில்கள், வௌவால்கள் போன்றவையும் அடங்கும்.
பொறியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விலங்குகள் கடுமையாக முயலும்போது, அவற்றின் தோல், எலும்புகள், உடல் உறுப்புகள் போன்றவை பாதிக்கப்படுகின்றன. சில மடிந்தும் விடுகின்றன என்றார் திருவாட்டி அன்பரசி.

