குடும்பச் சேவை திட்டத்தில் பிள்ளைகளையும் முதியோரையும் கவனித்துக்கொள்ளும் ஒரு செயல்திட்டம் இரண்டு ஆண்டு முன்னோடித் திட்டமாக சேர்க்கப்படுகிறது.
மனிதவள அமைச்சு நேற்று இதனைத் தெரிவித்தது. அந்த முன்னோடித் திட்டத்தில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள், இப்போது மேலும் பல வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்தி அத்தகைய பகுதி நேர சேவைகளைக் குடும்பங்களுக்கு வழங்கலாம்.
குடும்பச் சேவை திட்டத்தின்கீழ் 140 நிறுவனங்கள் இப்போது 21,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குச் சேவை வழங்குகின்றன.
இந்தத் திட்டம் 2017ல் முன்னோடித் திட்டமாக நடப்புக்கு வந்து 2021 செப்டம்பரில் நிரந்தரத் திட்டமாகியது. இப்போது இத்திட்டம் விரிவடைந்துள்ளது.
இதன்படி, ஒன்றரை வயது நிரம்பிய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வோரின் பணிகளில் பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுப்பது, உடை அணிவிப்பது, உறிஞ்சு ஆடைகளைக் கழற்றி மாட்டுவது ஆகியவை உள்ளடங்கும்.
பிள்ளைகளை கல்வி மேம்பாட்டுச் செயல்களில் ஈடுபடுத்துவதும் அவர்களின் இதர பணிகளாக இருக்கும்.
அதேபோல, முதியோரைக் கவனித்துக்கொள்வோர், அவர்களைக் குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது, உடை அணிவிப்பது உடல்நலத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவது போன்றவற்றைச் செய்ய வேண்டி இருக்கும்.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் முதியவர்களைப் பொறுத்தவரை அவர்களைப் பாதுகாப்பாக சக்கர நாற்காலிகளில் உட்காரவைத்து, தள்ளிச் செல்ல வேண்டிய பொறுப்பும் அத்தகைய ஊழியர்களைச் சேர்ந்ததாகும்.
புதிய முன்னோடித் திட்டத்திற்கான யோசனைகளை வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து அமைச்சு பெற்றது.
குடும்பச் சேவை திட்டத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டியது முக்கியமானது. குடும்பத்திற்கான பராமரிப்புத் தேவைகளை அவை மதிப்பிட வேண்டும்.
ஊழியர்களின் அனுபவங்களையும் தகுதிகளையும் குடும்பத்திடம் அந்த நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
சுகாதார அமைச்சு நிர்ணயித்து உள்ள பயிற்சித் தேவைகளை அந்த ஊழியர்கள் நிறைவேற்ற வேண்டும்.
செயல்திட்டம் விரிவடைந்து இருப்பது பற்றிக் கருத்து கூறிய மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்களுக்குக் கூடுதலாக ஊழியர்கள் கிடைப்பார்கள் என்றார்.
"அவர்கள் பகுதிநேர பராமரிப்புச் சேவைகளை வழங்கி உதவுவார்கள். இதன்மூலம் குடும்பங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
"சிங்கப்பூரர்கள் தங்கள் வேலை, குடும்பப் பொறுப்புகளுக்கு இடையில் சிறந்த முறையில் சமநிலையைக் காண இது உதவும்.
"இந்த முன்னோடித் திட்டம் கண்காணிக்கப்பட்டு குடும்பங்கள், நிறுவனங்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு, மாற்றம் ஏதேனும் தேவை எனில் கவனித்தில் கொள்ளப்படும் என்று மனிதவள துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

