நடிகர் தாக்கப்பட்ட சம்பவம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு
மலேசிய நடிகர் கமால் அட்லி, 36, தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் 33 வயது ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
முகம்மது நபில் ரஷித் என்ற அந்த ஆடவர், ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் விளைவித்து இருக்கிறார் என்று குற்றச்சாட்டு கூறுகிறது. நடிகர், சிங்கப்பூர் எக்ஸ்போவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களைச் சந்தித்தார்.
அப்போது நடிகர் கமாலை லத்தி ஒன்றால் அந்த ஆடவர் தாக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தச் சம்பவம் பற்றி காவல்துறையிடம் அதே நாளன்று இரவு 9.19 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து எஃகு லத்தி ஒன்றைக் காவல்துறை கைப்பற்றியது.
முகம்மது நபில் ரஷித் நேற்று காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அந்த ஆடவரை மனநலக் கழகத்தில் விசாரணைக்காவலில் வைத்து மனநலனைக் கண்காணிக்க வேண்டும் என்று அரசினர் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதி அனுமதித்தார்.
பிஎஸ்ஏ பங்கை வாங்க சீன நிறுவனங்கள் ஆர்வம்
ஹாங்காங்கின் 'சிகே ஹுட்ஷிசன் ஹோல்டிங்ஸ்' துறைமுக நிறுவனத்தின் சொத்துகளில் 'பிஎஸ்ஏ இன்டர்நேஷனல்' நிறுவனத்திற்கு 20% பாத்தியதை இருக்கிறது. அந்தச் சிறுபான்மை பங்கை கொள்முதல் செய்ய சீனாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான 'சைனா மெர்ச்சன்ட்ஸ் குரூப்' நிறுவனமும் 'சைனா கோஸ்கோ' நிறுவனமும் நாட்டத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிஎஸ்ஏ இன்டர்நேஷனல் தனது 20% பங்கிற்குச் சுமார் US$4 பில்லியன் (S$5.4 பில்லியன்) கேட்கிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. பிஎஸ்ஏ இன்டர்நேஷனல், சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு அமைப்பான தெமாசெக்கிற்குச் சொந்தமானது.
அது ஆலோசனை நிறுவனம் ஒன்றுடன் செயல்பட்டு வருகிறது. விற்பனை நடைமுறை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.
பிஎஸ்ஏ, இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுடன் தொடக்க பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பிஎஸ்ஏ பேச்சு நடத்திவரும் நிறுவனங்களில் சைனா மெர்ச்சன்ட்ஸ் குரூப், சைனா கோஸ்கோ நிறுவனம் ஆகியவையும் உள்ளடங்கும்.
ஸ்பைஸ் பிடோக் உணவகத்தின் துப்புரவுத் தரம் குறைப்பு
பிரபலமான ஸ்பைஸ் உணவக நிறுவனத்தின் பிடோக் கிளையின் உணவு துப்புரவு தரம் 'ஏ' நிலையில் இருந்து 'சி' நிலைக்குக் குறைக்கப்பட்டுவிட்டது.
சென்ற ஆண்டில் நிகழ்ந்த உணவு நச்சு சம்பவத்தில் 15 பேருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அந்தக் கிளைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்பைஸ் சிம்பாங் பிடோக் உணவகத்தில் சென்ற ஆண்டு ஜூலை 5ஆம் தேதியும் 6ஆம் தேதியும் சாப்பிட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு சென்ற சனிக்கிழமை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அதை அடுத்து ஜூலை 10ஆம் தேதி இந்த அமைப்பும் சுகாதார அமைச்சும் 338 பிடோக் ரோடு, ஸ்பைஸ் காண்டினெண்டல் கிச்சன் என்ற உணவு ஸ்டால் கடையையும் 284 பிடோக் ரோடு ஸ்பைஸ் உணவுக் கடையையும் சோதித்தன. பல துப்புரவுக் குறைபாடுகள் தெரியவந்தன.
அந்தக் குறைபாடுகள் காரணமாக, கடைகளின் உரிமங்கள் தொடர்பில் உணவு அமைப்பு அமலாக்க நடவடிக்கை எடுக்கும். அவற்றின் துப்புரவுத் தரம் 2023 மார்ச் 10ஆம் தேதி முதல் குறைக்கப்பட்டுள்ளது. அது ஓராண்டில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில்பாதை வழி சிங்கப்பூருக்குள் வர முயற்சி: ஆடவர் பிடிபட்டார்
ஜோகூர் கடற்பால ரயில்பாதை வழியாக சிங்கப்பூருக்குள் வர முயன்ற ஒருவர் சிக்கினார்.
குடிநுழைவுக் குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பங்ளாதேஷைச் சேர்ந்த ஒருவரைத் தாங்கள் மார்ச் 9ஆம் தேதி மடக்கியதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தது.
அவரிடம் அசல் ஆவணங்களோ, பயண ஆவணங்களோ எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் மொத்தம் 414 குடிநுழைவுக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 355 ஆக இருந்தது.

