செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
826026af-e0aa-43f5-a29a-56bc4e1bd704
-

'பெண் முன்னேற்றம் செயல்வடிவம் பெற மனப்போக்கில் மாற்றம் தேவை'

பெண் முன்னேற்றம் என்பது நீண்டதூரத்தைக் கடந்து வந்தாலும் அது இன்னும் நிறைவேற்றப்படவேண்டிய நிலையிலேயே உள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். பாகுபாடுகளையும் தடைக்கற்களையும் பெண்கள் இன்னும் எதிர்நோக்கும் நிலையே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"பெண் முன்னேற்றம் என்பதை நிலைநாட்டவும் அதனை நோக்கிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவும் சரியான மனப்போக்கை விதைப்பது முக்கியம். இதற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் ஆதரவும் தேவைப்படுகிறது," என்றார் திரு சண்முகம். அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி 'அனைவரையும் உள்ளடக்கிய வேலையிடம்' என்னும் கருப்பொருளில் டிபிஎஸ் வங்கி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திரு சண்முகம், "இன்றைய சிங்கப்பூர், பெண் முன்னேற்றத்துக்கு உதவக் கூடிய பலரைக் கொண்ட நல்ல இடமாக உள்ளது. அரசு அமைப்புகள் திறமையாளர் களை வளர்ப்பதில் ஆண், பெண் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரில் பாதிப்பேரின் நிரந்தரச் செயலாளர்கள் பெண்களாகவே உள்ளனர்," என்றார்.

உள்ளூர் கலைகளை அதிகமானோர் போற்ற வேண்டும்: எட்வின் டோங்

உள்ளூர் கலைகளை அதிகமான சிங்கப்பூரர்கள் பாராட்ட வேண்டும் என்பதும் அவர்கள் அந்தக் கலைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்பதும் தமது விருப்பம் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் தெரி வித்துள்ளார். 2020 ஜூலை மாதம் தாம் இந்தப் பொறுப்புக்கு வந்தபோது கொள்ளைநோயால் உலகம் அல்லல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது கலைகளைக் கையாளும் சமூகம் மகிழ்ச்சி இழந்து காணப்பட்டதாகவும் திரு எட்வின் கூறினார்.

"நான் இந்தத் துறையின் அமைச்சராகப் பதவியேற்ற போது கலைஞர்கள் அத்தியாவசியமானவர்கள் அல்லர் என்று கூறப்படுவதைக் கேள்விப்பட்டேன். அதனால் நான் வருத்தமுற்றேன். கலைகள் என்பது சிங்கப்பூரின் மென்மை யான பக்கம்.

"கலாசாரம், மரபுடைமை ஆகியன மட்டுமின்றி விளை யாட்டுகள், சில வேளைகளில் சமயம்கூட கலைகள் தொடர் பானவையே," என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளரிடம் திரு எட்வின் கூறினார். தற்போது கலைகள் புத்துணர்ச்சி பெற்றுவருவதைத் தொடர்ந்து 'நமது எஸ்ஜி கலைகள் திட்டம் 2.0' என்பதை தேசிய கலைகள் மன்றம் விரைவில் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.