உலகப் பதற்றங்களுக்கு இடையே ஆசியாவும் ஐரோப்பாவும் இருதரப்பு நன்மைக்காக இணைந்து பணியாற்றுமாறு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
புவிசார் அரசியல் உறவுகளில் அதிக அழுத்தத்தை உலகம் சந்தித்து வரும் நிலையிலும் பொருளியல் ஒத்துழைப்புக்கு எதிராக உலகம் பின்னுக்குத் தள்ளப்படும் நிலையிலும் ரஷ்யா-உக்ரேன் போர் நீடிக்கும் நிலையிலும் அவை இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
வறுமை நிலையிலிருந்த ஏராளமான மக்களை முன்னேற்று வதில் கடந்த 60 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்ட உலகமயம் மற்றும் பொருளியல் ஒருங்கிணைப்பு தொடர்பான உத்தி தற்போது சிக்கலில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசிய-ஐரோப்பிய அறக்கட்டளையின் (ஏஎஸ்இஎஃப்) 25வது ஆண்டுவிழாவில் பங்கேற்று டாக்டர் விவியன் உரையாற்றினார்.
இந்நிகழ்வு பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பரிமாற்றங்கள், கலாசாரம், அறிவாற்றல் ஆகியவற்றின் வழி மக்களுக்கு இடையில் இருதரப்புப் புரிந்துணர்வை வளர்ப்பதில் அறக்கட்டளை சிறப்பாகச் செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.
கடந்த 1997ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை பலதரப்பு அம்சங்களை உள்ளடக்கிய, லாப நோக்கமற்ற ஓர் அமைப்பாகும்.
ஆசிய-ஐரோப்பிய இணைப்புக்கான குடிமை அமைப்பாகச் செயல்படுவதும் அறக்கட்டளையின் செயல்பாடுகளில் அடங்கும்.
அரசியல், பொருளியல் மற்றும் சமூக-கலாசார விவகாரங்களைக் கவனிக்கும் பொருட்டு கடந்த 1996ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு 'ஆசிய-ஐரோப்பிய இணைப்பு'.

