கருத்தாய்வு முடிவுகள்: அரசுசாரா அமைப்புகள், வர்த்தகங்கள் மீதான நம்பிக்கை சரிவு
சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின்மீது கொண்டுள்ள நம்பிக்கை சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது.
எடெல்மன் டிரஸ்ட் பாரோமீட்டர் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தக் கருத்தாய்வில் சென்ற ஆண்டு சிங்கப்பூரில் உள்ள 1,135 பேர் கலந்துகொண்டனர். அரசாங்கம்தான் சிங்கப்பூரில் ஆக அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ள அமைப்பு என்றும் அவர்கள் கூறினர்.
சென்ற ஆண்டு அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இரண்டு விழுக்காடு அதிகரித்து 76 விழுக்காடு ஆனது. அதேவேளையில் அரசு சாரா அமைப்புகள் மீதான நம்பிக்கை மூன்று விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது. வர்த்தகங்கள் மீதான நம்பிக்கையும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது.
கருத்தாய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரின் தற்போதைய தலைமைத்துவம் உலகப் பொருளியல் சிக்கல்களுக்கு இடையே நாட்டைத் திறமையாக வழிநடத்தும் என்ற மக்களின் நம்பிக்கையைக் காட்டுவதாக கருத்தாய்வை நடத்திய எடெல்மன் நிறுவனம் குறிப்பிட்டது.
மொத்தம் 28 நாடுகளில் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவற்றில், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாங்கங்களின் பட்டியலில் சிங்கப்பூர் அரசாங்கம் நான்காவது இடத்தைப் பிடித்து உள்ளது.
சீனா 89 விழுக்காட்டுடன் முதலிடத்திலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் 86 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்திலும் 83 விழுக்காட்டுடன் சவூதி அரேபியா மூன்றாவது நிலையிலும் உள்ளன.
சிங்கப்பூரில் அரசு சாரா அமைப்புகள் மீதான நம்பிக்கை 65 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. சுவீடன், ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றைவிட இது அதிகம்.
இங்கு வர்த்தகங்கள் மீதான மக்களின் நம்பிக்கை 62 விழுக்காடாகப் பதிவானது.
கருத்தாய்வில் பங்குபெற்ற 59 விழுக்காட்டினர் ஊடகங்கள் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் 32,000 பேரிடம் சென்ற நவம்பரில் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

