உபி அவென்யூ 1, புக்கிட் தீமா ஆகிய பகுதிகளில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் $118,000 மதிப்புள்ள போதைப்பொருள்களோடு கைத்துப்பாக்கி, கத்திகள், வாள்கள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை உபி அவென்யூ 1ல் நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் 32 வயது ஆடவரும் 22 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் பெரும்பகுதியும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு உரிய கருவிகளும் பல்வேறு வகையான ஆயுதங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததன் தொடர்பில் அந்த ஆடவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
புக்கிட் தீமாவில் 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
ஆயுதங்கள் வைத்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது.
இருப்பினும், இதனால் அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றுவதிலிருந்து பின்வாங்கமாட்டார்கள் என்று அது கூறியது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கிடைப்பதைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவர் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை தொடர்கிறது.
சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், நாட்டிற்குள் யாரேனும் 250 கிராம் அளவிலான மெத்தஃபிட்டமின் அல்லது 500 கிராம் கஞ்சாவைக் கடத்தியது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

