புதுப்பிக்கப்படும் எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் இந்தோனீசியாவுடன் ஒப்பந்தம்
சூரியசக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்துக்கு உதவும் ஹைட்ரஜன் வாயு ஆகியவற்றை சிங்கப்பூர் விரைவில் இந்தோனீசியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கும். புதுப்பிக்கப்படும் எரிசக்திக்கான ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாடுகளும் நேற்று செய்துகொண்ட ஒப்பந்தம் இதனைச் சாத்தியமாக்கும்.
இந்தோனீசியாவில் இத்தகைய எரிசக்தியைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் முதலீட்டை ஊக்குவிக்கவும் எல்லைதாண்டிய மின்சக்தி விற்பனைத் திட்டங்களை மேற்பார்வையிடவும் இரு நாடுகளும் இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கும்.
சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் கையெழுத்திட்டுள்ள புதுப்பிக்கப்படும் எரிசத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக இது அமையும்.
சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், இந்தோனீசியாவின் கடல்துறை விவகாரங்கள், முதலீடு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான ஜெனரல் லுஹுட் பின்சார் பண்ட்ஜாய்தான் இருவரும் நேற்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பு, எரிசக்திப் பாதுகாப்பு போன்றவற்றை வலுப்படுத்த உதவும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார். இஸ்தானாவில் நடைபெற்ற சிங்கப்பூர்-இந்தோனீசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பில் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உடனான சந்திப்பில் அவர் உரையாற்றினார். இது இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடியது என்றார் அவர்.
புதிய ஒப்பந்தத்தின்கீழ் இந்தோனீசியாவில் அமைக்கப்படும் எரிசக்தித் தொழிற்சாலைகள் உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதி இரண்டுக்குமே பயன்படும் என்றும் எதிர்காலப் பயன்பாட்டுக்காக கொள்கலன்களில் மின்சக்தியைச் சேகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.
ரியாவ் தீவுகள் போன்ற பகுதிகளில் பசுமைத் தாழ்வாரங்களை அமைப்பதற்கு இவை கைகொடுக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
எல்லைதாண்டிய மின்சக்தி வர்த்தகம் நடப்புக்கு வந்தால், 2035ஆம் ஆண்டுக்குள் நான்கு கிகாவாட் குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றும் மின்சாரத்தை இறக்குமதி செய்யும் சிங்கப்பூரின் இலக்கை எட்ட இயலும்.
இரு நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திறன்மிக்க புதிய பரிந்துரைத் திட்டங்களை மறுஆய்வு செய்ய இருதரப்பு அரசாங்கங்களும் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டது.
கடந்த ஈராண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து சிங்கப்பூர் நிறுவனங்கள் தூய்மையான எரிசக்தியை இந்தோனீசியாவில் இருந்து இங்கு இறக்குமதி செய்வது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

