சிங்கப்பூர் விரைவில் கம்போடியாவில் இருந்து ஆண்டுக்கு 1 கிகாவாட் புதுப்பிக்கப்படும் எரிசக்தியை இறக்குமதி செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்பில் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
மின்சக்தி இறக்குமதி தொடர்பில் சிங்கப்பூர் செய்துகொள்ளும் ஆகப் பெரிய ஒப்பந்தம் இது.
இறக்குமதி தொடர்பில் 'கெப்பல் எனர்ஜி' நிறுவனம் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலைப் பெற்றிருப்பதாக எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்தது.
இதன்கீழ், தண்ணீர், சூரியசக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தியும் காற்றாலைகளிலும் தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கம்போடியாவின் 'ராயல் குருப்' மின் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய இயலும்.
கடலடிக் கம்பி வடங்கள் மூலம் இந்த மின்சாரம் கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தருவிக்கப்படும்.
ஆண்டுக்கு 1 கிகாவாட் மின்சாரம் என்பது ஏறத்தாழ 1.4 மில்லியன் வீடுகளின் ஓர் ஆண்டுக்கான மின்சாரத் தேவையை ஈடுகட்டும் எனக் கருதப்படுகிறது.
'கெப்பல் எனர்ஜி' நிறுவனம் இந்தத் திட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து மேலும் ஆய்வுசெய்த பிறகு, இரு நாட்டு அரசாங்கங்களிடம் இருந்தும் ஒப்புதல் பெறும் என்று கூறப்பட்டது. அதன்பிறகே ஒப்பந்தம் உறுதிசெய்யப்படும்.
இணக்கக் குறிப்புக்கான கையெழுத்து நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இத்திட்டத்தின்கீழ் 1,000 கிலோமீட்டருக்கு மேலான தொலைவுக்கு அமைக்கப்படும் கடலடிக் கம்பிவடம்தான் தென்கிழக்காசியாவின் ஆக நீளாமான கம்பிவடமாக இருக்கும் என்றார் அவர். சிங்கப்பூருக்கு புதுப்பிக்கப்படும் எரிசக்தியை விநியோகம் செய்வது தொடர்பில் ஆஸ்திரேலியா, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20க்கு மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக ஆணையம் கூறியது.