தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்நாட்டுத் தலைமை நீதிபதி முகமது சைரிஃபுதீனை அவர் சந்தித்தார்.
இருதரப்பு நீதித்துறை உறவுகளையும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான பங்காளித்துவத்தையும் வலுப்படுத்துவது திரு மேனனின் பயண நோக்கம் என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அனைத்துலக வர்த்தக சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது குறித்து இரு தலைமை நீதிபதிகளும் கலந்துரையாடினர். இரு நாட்டு நீதிமன்றங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் தொடர்பு, எல்லைதாண்டிய நொடித்துப்போதல் சம்பவங்கள், வர்த்தக நீதிமன்றங்கள் ஆகியவை தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
இந்தோனீசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் தலைமை நீதிபதி மேனன் உரையாற்றினார்.
ஆசியான் வழக்கறிஞர் சங்கத் தலைவருமான திரு மேனன், ஆசியான் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹூனையும் சந்தித்துப் பேசினார்.

