பங்குச் சந்தையில் நேற்று உள்ளூர் வங்கிப் பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது.
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சுவிஸ் வங்கிப் பங்குகளின் விலை சரிந்தது, அமெரிக்க வங்கிகள் சில முடங்கிப்போனது ஆகியவற்றைத் தொடர்ந்து சிங்கப்பூர் வங்கிகளின் பங்கு விலை பாதிக்கப்பட்டது.
டிபிஎஸ் வங்கிப் பங்கு விலை 1.12 விழுக்காடு குறைந்து $32.60 ஆனது.
ஓசிபிசி வங்கிப் பங்குகளின் விலை 1.06 விழுக்காடு குறைந்து $12.14ஆகவும் யுஓபி வங்கிப் பங்குகளின் விலை 0.74 விழுக்காடு சரிந்து $27.99 ஆகவும் இருந்தன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு நேற்று 0.6 விழுக்காடு இறக்கம் கண்டது.
நேற்று முன்தினம் கிரெடிட் சுவிஸ் வங்கிப் பங்குகள் கிட்டத்தட்ட 30 விழுக்காடு வீழ்ச்சி கண்டன.
அந்த வங்கியின் ஆகப் பெரிய பங்குதாரரான சவூதி நேஷனல் வங்கி இனி முதலீடு செய்யப்போவதில்லை என்று தெரிவித்தது இதற்குக் காரணம்.
அண்மையில் அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி நொடித்துப்போனது, நியூயார்க்கில் சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டது ஆகியவற்றாலும் உலகெங்கும் உள்ள நிதிச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வங்கிகள் அண்மையில் நொடித்துப்போனதால் சிங்கப்பூர் வங்கிகளுக்குப் பாதிப்பு அதிகம் இருக்காது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் சென்ற திங்கட்கிழமை தெரிவித்தது.
உலகளவில் நிதிச் சந்தையில் நெருக்கடி நேர்ந்தாலும் சிங்கப்பூர் வங்கிகளின் நிதி நிலைமை நன்றாகவே இருப்பதாக அது கூறியது. நிலைமை மோசமானால் கைகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
தற்போதைய நிலைமை 2008ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி போன்ற சிக்கலை உருவாக்கும் சாத்தியமில்லை என்கின்றனர் நிதித்துறை வல்லுநர்கள்.

