வலிப்பு நோய் உள்ள ஒருவர் வாகனம் ஓட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
ஆனால் முகம்மது ஹாடி சஸாலி என்ற அந்த நபர் அதையும் மீறி காரை ஓட்டியிருக்கிறார்.
அதன் விளைவாக கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அவர் ஓட்டிய கார் டவர் டிரான்சிட் பேருந்து சேவை எண் 858 மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
அந்த விபத்தில் திரு முகம்மது ஹாடியும் காரில் இருந்த மற்றொரு பயணி திருவாட்டி சாரியா பக்ரி என்பவரும் விபத்தில் எற்பட்ட காயங்களால் மரணமடைந்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணையில் விபத்துக்கு முன்னால் திரு ஹாடிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதா என்பதைக் கூற முடியவில்லை என்று மரண விசாரணையில் பங்கேற்ற மருத்துவர் தெரிவித்தார்.
இதனால், மரண விசாரணை அதிகாரியான ஷர்மிளா ஸ்ரீபதி ஷனாஸ், 53 வயது திருவாட்டி சாரியா பக்ரியின் மரணம் தற்செயலானது என்று தீர்ப்பளித்தார். ஆனால், திரு ஹாடியின் மரணம் குறித்து விசாரணையின் முடிவில் அவர் எவ்விதத் தீர்ப்பும் கூறவில்லை. எனினும், விசார ணையில் போக்குவரத்து காவல் துறை அதிகாரி எஸ்ஐ ரசிஸ் தாஹார், திரு ஹாடி வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததை சுட்டிக்காட்டினார். அத்துடன், வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வருவோர் வாகனம் ஓட்ட கூடாது என்றும் திரு ஹாடியும் அவ்வாறே அறிவுறுத்தப்பட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

