தஞ்சோங் பகாரில் ஐவர் கொல்லப்பட்ட மிக மோசமான கார் விபத்தில் தொடர்புடைய பெண், ஆபத்தான முறையில் கார் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 பிப்ரவரி 13ஆம் தேதி தஞ்சோங் பகாரில் நிகழ்ந்த விபத்து சிங்கப்பூரையே அதிர வைத்தது.
இந்தச் சம்பவத்துக்கு முன்பு 26 வயது பூ யி லின் வேக வரம்பை மீறி 109 கிலோ மீட்டர் வேகத்தில் 'பிஎம்டபிள்யூ எம்4' காரை ஓட்டியிருக்கிறார்.
இவருக்கு அடுத்ததாக காரின் உரிமையாளரான ஜோனதன் லோங் ஜுன்வெய், 29, காரை ஓட்டியபோதுதான் விபத்து நேர்ந்தது. பூ யி லின் ஏற்கெனவே காரிலிருந்து இறங்கிவிட்டதால் அவர் உயிர் தப்பினார்.
அதிகாலை 5.40 மணியளவில் திரு லோங் 182 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தினார். அந்த கார் சாலையில் சறுக்கிச் சென்று கடை வீட்டின் முன்பு மோதி வெடித்தது.
திரு லோங்கும் அவருடன் சென்ற நான்கு பயணிகள் வில்சன் டியோ சி ஸியாங், 26, எல்வின் டான் யோங் ஹாவோ, 28, இயூஜின் யாங் ஷெங் மின், 29, கேரி வோங் ஹோங் சியா, 29, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதற்கு முன்பு அதிகாலை 5.35 மணி அளவில் தஞ்சோங் பகார் ரோட்டில் அதே காரை பூ 109 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிப் பார்த்தார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மலேசியரான பூ கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து வெளியேற விரும்பினார். ஆனால் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் அவர் மீது முறைப்படி குற்றம்சாட்டப்பட்டது. வரும் ஏப்ரல் 3ஆம் தேதி அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐவர் உயிரிழந்த மரண விசாரணையின்போது பேசிய போக்கு வரத்து விசாரணை அதிகாரி ஃபிர்டாஸ் சுலைமான், விபத்துக்கு சற்று நேரத்துக்கு முன்பு லோங்கும் அவரது நண்பர்களும் அங் மோ கியோவில் ஒன்றுகூடி சீனப்புத்தாண்டைக் கொண்டாடியதாகவும் அங்கு அவர்கள் மது அருந்தியதாகவும் தெரிவித்தார்.
பின்னர் தஞ்சோங் பகார் ரோட்டில் உள்ள ஹோங் ஜியா ஜாங் உணவகத்துக்கு அனை வரும் சென்றனர். உணவகத்திலும் அவர்கள் மது அருந்தினர். பின்னர் லோங் தனது புதிய பிஎம்டபிள்யூ காரை நண்பர் களுக்குக் காட்டினார். அப்போது ஒவ்வொருவராக காரை ஓட்டிப் பார்த்தனர்.
திரு யாப் முதலில் காரை ஓட்டிப் பார்த்தார். உணவகத்திலிருந்து கெப்பல் வரை ஓட்டிச்சென்று எங்கோர் ஸ்திரீட்டில் திருப்பி வந்தார். மேக்ஸ்வெல் சாலையை நோக்கி தஞ்சோங் பகார் சாலை வழியாகச் சென்ற பிறகு உணவகத்துக்கு அருகே அவர் காரை நிறுத்தினார்.
திரு யாப் காரை 77 முதல் 88 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினார்.
பின்னர் அதே வழியாக திரு பார்க் 59 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டிப் பார்த்தார். இதே போல பூவும் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
லோங் நான்காவது ஓட்டு நராக தனது நான்கு நண்பர்களுடன் காரை ஓட்டிச்சென்றபோது விபத்து நிகழ்ந்தது.
லோங்கின் காதலியான 26 வயது ரேபி ஓ சியவ் ஹுவே கார் வெடித்து எரிந்து கொண்டிருந்தபோது காரில் சிக்கியவர் களுக்கு உதவி செய்ய முயற்சித்தார்.
ஆனால் தீயில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைந்துள்ளார்.
லோங், யாப், டான் ஆகிய மூவரும் கடுமையான தீக்காயத்தால் உயிரிழந்தனர். மோசமான தீக்காயம் மற்றும் முதுகெலும்பு காயத்தால் டியோ மாண்டார். வோங் கடுமையான தீக்காயத்தாலும் இடுப்பு எலும்பு காயத்தாலும் இறந்தார்.

