சமூகத்தில் உடல் பலவீனம் அடையும் முதியோரின் எண்ணிக்கை தற்போது 5 விழுக்காட்டிலிருந்து ஆறு விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வரும் நிலையில் 2030ஆம் ஆண்டில் இது 27 விழுக்காடு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பெரும் மாற்றத்தைக் கண்டு மக்கள் பதற்றம் அடையலாம். ஆனால் பலவீனம் அடையும் முதியோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதால் எல்லாம் முடிந்துவிட்டது என்றாகிவிடாது என்று 2019ஆம் ஆண்டில் டான் டோக் செங் மருத்துவமனை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பலவீனம் அடையும் முதியோரை மீண்டும் வலுவூட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதியோருக்கு மட்டுமன்றி மருத்துவர்களுக்கும் நற்செய்தி.
"65 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோரில் பத்து விழுக்காட்டினர் இலேசான, நடுத்தர பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து விழுக்காட்டினர் மிக கடுமையான பலவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எங்களுக்கு கவலையை அளிக்கிறது.
"எனவே, பாதிப்படைந்தோரின் மருத்துவச் செலவு அதிகரிப்பதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும்," என்று டான் டோங் செங் மருத்துவமனையின் மத்திய சுகாதாரப் பிரிவின் மருந்தக இயக்குநர் டாக்டர் ஜெரோம் கோ தெரிவித்தார்.
கடும் பலவீனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோரைவிட ஐந்து மடங்கு அதிகம் மருத்துவக் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்றார் அவர்.
எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அப்படியே உட்கார்ந்து அல்லது படுத்திருப்பது, ஊட்டச்சத்து குறைபாடு, மற்றவர்களுடன் பழகாமல் தனிமையில் இருப்பது, அதிக அளவிலான மருந்துகளை உட்கொள்வது போன்றவை உடல் பல
வீனம் அடைவதற்குக் காரணமாகக்கூடும். உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கத்தில் மாற்றம், அறிவாற்றல் பயிற்சி ஆகியவை உடல் பலவீனத்தைத் தடுக்கலாம் அல்லது தள்ளிப் போடலாம் என சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே பலவீனம் அடைந்திருக்கும் முதியோர் மீண்டும் வலுவடைய இவை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

