நிறுவன இயக்குநர் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு
நான்கு நிறுவனங்களின் இயக்குநராக இருந்த பெர் போ ஹுவாட், 57, என்பவர், வீடு ஒன்றைக் கட்டுவதற்காக குறைந்தது $8 மில்லியன் தொகைக்கான காசோலையைக் கொடுக்கும்படி ஆடவர் ஒருவரைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் கட்டுமானப் பணிகள் 2021ஆம் ஆண்டில் நின்றுவிட்டன. அந்த இயக்குநர், $2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையைத் தவறாகக் கையாண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நம்பிக்கை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இயக்குநர் பெர், அந்தக் குற்றத்தை 2019ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதிக்கும் டிசம்பர் 4ஆம் தேதிக்கும் இடையில் செய்ததாகக் கூறப்படுகிறது.
லிம் பீ ஹுவாட் என்பவருக்குச் சொந்தமான எட்டு காசோலைகள் மூலம் இயக்குநர் பெர் கணக்கில் பணம் போடப்பட்டு, அந்தப் பணம் அவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. லிம் பீ ஹுவாட் யார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் 47 வயதுள்ள மற்றோர் ஆடவர் புலன்விசாரணையில் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இயக்குநர் பெர்ருக்கு $200,000 பிணை அனுமதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிணை மறுபரிசீலனை மார்ச் 21ஆம் தேதி நடக்கும்.
ஏமாற்றியதாகக் கூறப்படும் முன்னாள் அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டு
ரசாக் முகம்மது லாசிம், 56, என்பவர், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) மதரசாக்களுக்கான இயக்குநராக முன்பு இருந்தார்.
அவர், இப்போது 'இர்ஷ்யார்ட் டிரஸ்ட் லிமிட்டெட்' (ஐடிஎல்) என்ற நிறுவனத்தின் பங்குதாரராகவும் ஓர் இயக்குநராகவும் இருக்கிறார்.
ரசாக், 'தெமாசெக் ஃபவுன்டேஷன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் கிட்டத்தட்ட $785,000 பணத்தை ஏமாற்றி இருக்கிறார் என்று கூறப்பட்டது. அவர், 2020 பிப்ரவரி 7ஆம் தேதி அல்லது ஏறக்குறைய அந்தத் தேதியில் $68,629 தொகையைத் தவறாகக் கையாண்டு இருக்கிறார் என்று இப்போது கூறப்படுகிறது. இதன் தொடர்பில் நேற்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தப் பணத்தை 'கே-ஓரியண்ட் லாமிடெக்' என்ற நிறுவனம், ஐடிஎல் நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தது. ரசாக்கிற்கு $30,000 பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரகசிய சங்கங்களை ஒடுக்க
நடவடிக்கை: 13 பேர் கைது
காவல்துறையின் உளவுப் பிரிவு அதிகாரிகளும் ஏழு காவல்துறை தரைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இம்மாதம் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை ரகசிய சங்கங்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தனர்.
நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட பொதுப் பொழுதுபோக்கு நிலையங்கள், இரவு விடுதிகள், உணவு, பானக் கடைகள் சோதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 150 பேரையும் அதிகாரிகள் சோதித்தனர். முடிவில் 13 ஆடவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் 19 வயது முதல் 26 வயது வரைப்பட்டவர்கள்.
கைதான அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை நேற்று அறிக்கையில் குறிப்பிட்டது.
யாராவது ஒருவர், சட்டவிரோத ரகசிய சங்க உறுப்பினர் என்று தீர்ப்பானால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கும். பொது பாதுகாப்புக்கு, அமைதிக்கு, சமூகக் கட்டொழுங்கிற்கு மிரட்டல் விடுக்கும் சட்டவிரோத செயல்களை ரகசிய சங்க காரியங்களைத் தான் ஒருபோதும் சகித்துக் கொள்ளப்போவதில்லை என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது.

