ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள இங் டெங் ஃபோங் மருத்துவமனையில், கைக்குழந்தைகள், சிறார், 16 வயது வரைப்பட்ட பதின்ம வயதினருக்காக ஒரு புதிய மருந்தகம் திறக்கப்பட்டு உள்ளது.
புதிய சிறார் சிறப்பு நிபுணத்துவ மருந்தகமான அது, பிப்ரவரி 20ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது.
அங்கு தனியார், மானியத்துடன் கூடிய சிறப்பு வல்லுநர்கள் அளிக்கும் வெளிநோயாளி சிகிச்சையைப் பெறலாம்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் செயல்படும் பெண்கள், சிறாருக்கான தேசிய பல்கலைக்கழக மையத்துடன் சேர்ந்து அந்த மருந்தகம் அமைக்கப்பட்டு உள்ளது.
சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளரும் ஜூரோங் குழுத்தொகுதிக்கான அடித்தள ஆலோசகருமான ரஹாயு மஹ்ஸாம் முன்னிலையில் மருத்துவமனை நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
இதனிடையே, தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமமும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
நாட்டின் மேற்கில் புதிதாக தெங்கா நகரம் உருவாக இருக்கிறது. அதில் 42,000 குடும்பங்கள் வசிக்கும்.
அதைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், மேற்கே சிறாருக்கான சுகாதார சேவைகளுக்கான தேவை கூடும்.
அதை நிறைவேற்றும் வகையில் புதிய சிறப்பு நிபுணத்துவச் சேவை மருந்தகம் திறக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. புதிய மருந்தகம் 233 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் செயல்படுகிறது.
புதிய மருந்தகம், நாட்டின் மேற்கே கைக்குழந்தைகள் சிறார், பதின்ம வயதினருக்குச் சேவை ஆற்றும் மூன்றாவது பொது மருந்தகமாகத் திகழ்கிறது.
அதில் நோய்களைக் கண்டு அறிவதற்கான வசதிகள், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, சிகிச்சை அறைகள் உள்ளன.
அவை கைக்குழந்தைகள், சிறாருக்குத் தோதாக அமைக்கப்பட்டு உள்ளன.
சிறப்பு ஆய்வுக்கூட, கதிரியக்க பரிசோதனை வசதிகளும் உண்டு. பொதுவான குழந்தை மருத்துவச் சேவைகளையும் அங்கு பெறலாம்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் செயல்படுகிறது; இதுவரை 200 பேருக்கு சிகிச்சை