செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்புத் துறைகளில் வெற்றிபெறுவதற்கான ஆற்றல் பெண்களிடம் உண்டு என்று தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
தகவல் பாதுகாப்பு பட்டத்தொழிலர்கள் சங்கம் ஏற்பாட்டில் நேற்று நடந்த 'இணையத்தில் மகளிர் கருத்தரங்கம்' என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், அந்த இரண்டு துறைகளும் இப்போதுதான் பரிணமித்து வருகின்றன என்பதையும் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒத்தவை என்பதையும் சுட்டினார்.
"அந்தத் துறைகளில் தேர்ச்சி பெற கடும் முயற்சி வேண்டும். கடும் உழைப்பு தேவைப்படும். எளிதான வழி எதுவும் இல்லை. விடாமுயற்சி அவசியம். துணிகர உணர்வும் ஆர்வமும் தேவை. என்னைப் பொறுத்தவரை அவற்றுக்கு மாதர்கள் நன்கு பொருத்தமானவர்கள் என்பதே எனது கருத்து," என்று அவர் கூறினார்.
திருவாட்டி டியோ, இணையப் பாதுகாப்பு, அறிவார்ந்த தேசம் இயக்கத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமாவார்.
அந்தக் கருத்தரங்கு 2வது ஆண்டாக இந்த ஆண்டு நடந்தது. 'செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பில் முன்னோடி: வழி வகுக்கும் மாதர்கள்' என்பது கருப்பொருள்.

