ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டு
புக்கிட் மேரா, ரெட்ஹில் குளோசில் இருக்கும் புளோக் 90ல் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில், தன்னுடன் வாடகைக்குக் குடி இருந்த ஆங் செங் கெக் என்ற 61 வயது ஆடவரைக் கொலை செய்ததாக
இங் பூன் ஹோங் என்ற 59 வயது ஆடவர் மீது
நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கலாம்.
வீட்டில் தீ: 30 பூனைகள் மீட்பு
பிப்பிட் ரோடு புளோக் 94ல் இருக்கும் வாடகை வீடு ஒன்றில் இந்த மாதம் 10ஆம் தேதி தீ மூண்டது. வீட்டில் தனிநபர் நடமாட்ட சாதனத்தில் மின்சாரம் ஏற்றிக்கொண்டு இருந்தபோது தீ மூண்டது.
தீயில் இருந்து 30க்கும் மேற்பட்ட பூனைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன. அவற்றுக்குச் சிகிச்சை அளிக்க பண உதவி செய்யும்படி தொண்டூழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வீட்டில் வசிப்போர், பூனைகளை மலடாக்கவும் அவற்றை வேறு இடங்களில் குடியேற்றவும் தொண்டூழியர்கள் பூனைகளைக் கொண்டு செல்லவும் அனுமதித்து உள்ளதாக பூனை நல்வாழ்வுச் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் தெனுகா விஜய்குமார் தெரிவித்தார். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வளர்ப்புப் பிராணியாக பூனையை வளர்ப்பது இப்போது சட்டவிரோதமானது. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டை அகற்றுவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
ஃபேஸ்புக், யூடியூப்புக்கான அதே கொள்கைதான் டிக் டாக்கிற்கும்
அரசாங்கம் விநியோகிக்கும் கருவிகளில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துவது, ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற இதர செயலிக்கான இப்போதைய கொள்கையின் அதே அடிப்படையில்தான் என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்கக் குழுமம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
டிக் டாக் செயலி, தேவை அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இந்தக் குழுமமும் இணையப் பாதுகாப்பு அமைப்பும் வெள்ளிக்கிழமை முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. டிக் டாக் செயலியை, தேவை அடிப்படையில் மட்டும் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்று அவை தெரிவித்தன. அந்தத் தகவலை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

