சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பங்கள் இப்போது 140க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் இயந்திரங்களில் இருந்து இலவசமாக மறுசுழற்சி பெட்டிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நீலப் பெட்டி என்று குறிப்பிடப்படும் அந்தப் பெட்டிகளை மடக்கி பையைப் போல வைத்துக்கொள்ளலாம். தண்ணீரில் சுத்தப்படுத்தலாம், பலமுறை பயன்படுத்தலாம்.
மறுசுழற்சிக்கு உதவும் பொருள்களை முறைப்படி அதற்கான பெட்டியில் சேர்ப்பதை எளிதாக்குவது இதன் நோக்கம்.
இந்தப் பழக்கத்தை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் இலக்கு. இந்த நீலப் பெட்டிகள் சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பரில் ஐந்து அக்கம்பக்கங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக விநியோகிக்கப்பட்டன.
ஃபெங்ஷான், செம்பவாங் வெஸ்ட், தெம்பனிஸ் நார்த், இயோ சூ காங், யூஹுவா ஆகியவற்றில் வசிக்கும் 8,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்தப் பெட்டிகளைப் பெற்றுக்கொண்டன.
நீலப் பெட்டிகளை நாடு முழுவதும் விநியோகிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. வீட்டில் ஒரு மூலையில் மறுசுழற்சி பொருள்களை சேகரித்து வைக்கும் பழக்கம் மக்களிடையே இதன் மூலம் உருவாகும் என்பது நம்பிக்கை.
சரியான முறையில் பொருள்களை மறுசுழற்சிக்கு உட்படுத்துவது அவசியம் என்பதை அந்தப் பெட்டி மக்களுக்கு நினைவூட்டும் என்று நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் கூறினார்.
நீலப் பெட்டி நிரம்பியதும் அதிலுள்ள மறுசுழற்சிப் பொருள்களை அவற்றுக்கான குப்பைத் தொட்டிகளில் போட்டுவிடலாம். அல்லது மறுசுழற்சி குழாய் குப்பைத்தொட்டிகளில் போட்டுவிடலாம். இந்தத் தொட்டிகள் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் இருக்கின்றன.
நீலப் பெட்டியில் 5 கிலோ தாள்கள், பிளாஸ்டிக், உலோக, கண்ணாடிப் பொருள்களை நிரப்ப முடியும். கழிக்கப்படும் மின்னணுப் பொருள்களையும் அதில் போட்டு வைக்கலாம்.
எந்தெந்த பொருள்களை மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும் என்பவை பற்றிய விவரங்கள் எல்லாம் அந்தப் பெட்டியில் இருக்கும். அந்தப் பெட்டியை நடுவில் தடுத்து வைத்துக்கொண்டு மறுசுழற்சிப் பொருள்களை தனியாகப் பிரித்து போடலாம்.
பொதுமக்கள் தங்களுடைய அடையாள அட்டை அல்லது சிங்பாஸ் மின்னிலக்க அடையாள அட்டை போன்றவற்றைப் பயன் படுத்தி நீலப் பெட்டியை இயந்திரத்தில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம்.
அந்தத் தேதிக்குப் பிறகு பெட்டிகள் ஏதேனும் மிஞ்சியிருந்தால் அவற்றை பொதுத்துறை, தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களோடும் பொதுமக்களோடும் சேர்ந்து செயல்பட்டு தான் விநியோகிக்கப் போவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிட்டது.

