உடற்குறைளாளர்கள், சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் சக்கரநாற்காலியில் தங்கு தடையின்றி வசதியாக சென்று வரக்கூடிய வழிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி பாதை வரைபடத்தை உருவாக்க 'ஸ்மார்ட் பிஎஃப்ஏ' (SmartBFA) என்ற ஒரு புதிய செயலி தொடங்கப்பட்டு உள்ளது.
அந்தச் செயலி இந்த மாதத் தொடக்கத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது என்றாலும் இதுவரை அவ்வளவாக அதிக தகவல்கள் அதில் இன்னமும் சேரவில்லை.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வழிகளில், ராஃபிள்ஸ், பூகிஸ், தோ பாயோ போன்ற பகுதிகள் உள்ளிட்ட மிகச் சிறிய அளவு தொடர்பான விவரங்கள்தான் அதில் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஆகையால் அந்தச் செயலி திட்டத்தின் பின்னணியாகச் செயல்படும் ஏழு பேரைக் கொண்ட ஒரு குழு, பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது.
கூகல், ஆப்பிள் செயலித் தளங்களில் கிடைக்கும் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, மக்கள் தாங்கள் அன்றாடம் சந்திக்கும் அத்தகைய வழிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவற்றைச் செயலியில் பதிவேற்றி உதவ வேண்டும் என்று குழு கேட்டுக்கொண்டு உள்ளது.
வருங்காலத்தில் செயலியில் அதிகமாக தகவல்கள் சேரும். சக்கரநாற்காலியில் தங்குதடையின்றி சென்றுவரக்கூடிய வழிகள்; எந்த எந்த வழிகளில் தடைகள் இருக்கும்;
நடு நடுவே இருக்கும் கட்டடங்களுக்கு உள்ளே செல்வதற்கான வாயில்வழி; கழிவறைக்குச் செல்வதற்கான வழிகள் போன்ற பலவற்றையும் சக்கரநாற்காலியைப் பயன்படுத்துவோர் அந்தச் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று குழு நம்புவதாக செயலி திட்டத் தலைவர்களில் ஒருவரான காய் ராய்பர் தெரிவித்தார்.
இதுவரை திரண்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அந்தச் செயலி அடிப்படை வழித்தடத்தை ஓரளவுக்குத்தான் உருவாக்க முயன்று உள்ளது.
என்றாலும் முதலில் அதிக தகவல்களைத் திரட்டுவதில் தாங்கள் ஒருமித்த கவனம் செலுத்துவதாக குழுவினர் தெரிவித்தனர்.

