மத்திய சேமநிதி உறுப்பினர்கள், தங்கள் சேமிப்பில் இருக்கும் தொகையைத் தங்களுக்குப் பிறகு யார் யார் எந்த அளவுக்குப் பெற வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு தங்கள் வாரிசுகளின் விவரங்களைத் தாக்கல் செய்யலாம்.
அப்படி அவர்கள் தங்களின் வாரிசைக் குறிப்பிடுவது, உயிலைப் போலவே கையாளப்படும். உறுப்பினர்கள் பதிவு செய்யும் வாரிசுகளின் பெயர்கள் அவர்களின் திருமணத்தின் பேரில் ரத்து செய்யப்படும். ஆனால் மணவிலக்கின் பேரில் ரத்து செய்யப்படுவதில்லை.
அவை உயில் போன்று கையாளப்படுவதே இதற்கான காரணம். மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நா22டாளுமன்றத்தில் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.
உயில்களைப் போலவே மத்திய சேமநிதி வாரிசுப் பதிவுகளும் மணவிலக்கை அடுத்து ரத்து செய்யப்படுவதில்லை.
சேமநிதி உறுப்பினர்கள் மணவிலக்கிற்குப் பிறகும் தங்கள் முன்னாள் கணவர் அல்லது மனைவிக்கு பிள்ளைகளுக்குச் சேமநிதிச் சேமிப்பைக் கொடுக்க விரும்பக்கூடும் என்பதே இதற்கான காரணம் என்றார் அமைச்சர்.
உறுப்பினர்களின் வாரிசுப் பெயர்ப் பதிவுகள் அவர்களின் திருமணத்தை அடுத்து ரத்து செய்யப்படும். புதிதாக வாரிசு பெயர்களைப் பதிய அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதே இதன் நோக்கம் என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் சில்வியா லிம், மவுண்ட்பேட்டன் தொகுதி உறுப்பினர் லிம் பியாவ் சுவான் இருவருக்கும் அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.
சேமநிதி உறுப்பினர்கள் முன்ன தாகவே பதிந்து வைத்திருக்கும் வாரிசுப் பெயர் பதிவுகள் உறுப்பினர்களின் திருமணத்தின்பேரில் ரத்து செய்யப்படுகின்றன. ஆனால் மணவிலக்கின் பேரில் ரத்து செய்யப்படுவதில்லை. இது குழப்பமாக இருக்கிறது என்று அந்த நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்வியும் அமைச்சரின் விளக்கமும் இடம்பெற்றன.
மன்றத்தில் இந்த விவகாரம் பற்றி விளக்கிய அமைச்சர், "சேமநிதி வாரிசுப் பதிவுகளைப் பற்றி பரிசீலிக்கும்படி சேமநிதிக் கழகம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பும் வருடாந்திர கணக்கு அறிக்கையில் நினைவூட்டும்.
"மணவிலக்கு பெற்றவர்களுக்கும் வாரிசு பரிசீலனை பற்றி நினைவூட்ட சேமநிதிக் கழகம் விரும்புகிறது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சேமநிதி உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழல் மாற்றங்களின்போது சேமநிதிக் கணக்கு வாரிசு பற்றி மறுபரிசீலனை செய்து வாரிசு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டான் கூறினார்.
இதை வசதியாக, பாதுகாப்பாக மத்திய சேமநிதி இணையத்தளம் வழியாக செய்துகொள்ளவும் கழகம் ஏற்பாடு களைச் செய்துள்ளது என்றாரவர்.

