மாணவர் ஒருவர் பள்ளிக்கு வராததை மட்டும் வைத்துக்கொண்டு சிறார் பாதுகாப்புச் சேவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்த இயலாது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தது.
அந்தச் சேவை, சிறார், இளையர்கள் சட்டத்தின்கீழ் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அது மட்டுமே போதுமானதாக இராது என்று அமைச்சு கூறியது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, ஒரு மாணவர் பள்ளிக்கு வரவில்லை என்றால் அதற்கு இதர பல காரணங்களும் இருக்கலாம் என்றார்.
கடந்த 2020ல் ஒரு 11 வயது சிறுமி மரணம் அடையும்வரை தாக்கப்பட்டதாக, கொடுமைப் படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. அதைத் தொடர்ந்து சிறார் கொடுமை சந்தேக சம்பவங்கள் பற்றிய புலன்விசாரணைகளுக்கான நடைமுறைகள் தொடர்பில் உறுப்பினர்கள் நேற்று பல கேள்விகளை எழுப்பினார்கள்.
அந்தச் சிறுமி 2020 ஆகஸ்ட் 26 முதல் 2020 அக்டோபர் 28ஆம் தேதி வரை பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லை.
சிறுமி பள்ளிக்கூடம் சென்றால் அவர் கொடுமைப்படுத்தப்பட்டது பற்றி வெளியே தெரிந்துவிடும் என்று அந்தச் சிறுமியின் தாயாரும் வளர்ப்புத் தந்தையும் பயந்தார்கள்.
சிறார் கொடுமைப் பற்றி புகார் தெரிவிக்கப்படும்போது அந்தச் சிறாரின் பாதுகாப்புக்கு உடனடியாக ஏதேனும் ஆபத்து உண்டா என்பது பற்றி சிறார் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் மதிப்பிடுவார்கள் என்று திரு சுவா கூறினார்.
அதிகாரிகள் பொதுவாக சிறாரிடம் இருந்து, அவரின் குடும்பத்தாரிடம் இருந்து, நிபுணர்களிடம் இருந்து தொலைபேசி வழி அல்லது காணொளி அழைப்புகள் வழி தகவல்களைப் பெறுவார்கள்.
அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சம்பவம் சிறார், இளையர்கள் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடுக்கும் அளவிற்கு இருக்கிறதா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
கொடுமைக்கு ஆளான பிள்ளையை அதன் வீட்டிலேயே பாதுகாப்பாக விட்டு வைக்க இயலாது என்றால் மட்டும் அதிகாரிகள் அந்தப் பிள்ளையை அதன் வீட்டைவிட்டு வெளியே கொண்டு சென்றுவிடுவார்கள்.
சிறார் கொடுமையின் தன்மையைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இராது என்று தெரிவித்த திரு சுவா, சிறார் பாதுகாப்புச் சேவை அமைப்பின் செயலுக்கு ஆதரவு அளிக்கும்படி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
குடும்ப வன்செயல் புரிந்துணர்வுப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும்படி சிங்கப்பூர் மக்களை அவர் வலியுறுத்தினார்.

