செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e725501e-6def-449b-8e07-b9e73df9ec6d
-

ஊழியர் தங்குவிடுதி மேம்பாட்டு திட்ட விவரங்கள் பற்றி அமைச்சர்

சிங்கப்பூரில் இப்போதுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய வசதிகளை மாற்றி அமைக்க ஆதரவு அளிக்கும் திட்ட விவரங்கள் இந்த ஆண்டுப் பிற்பகுதியில் அறிவிக்கப்படும்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால விவாதிப்புகள், ஆலோசனைகளை அடுத்து அந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது.

அதிகாரிகள் அமலாக்கும் அந்த உருமாற்றத் திட்டம், இப்போதுள்ள தங்குவிடுதிகளின் அடிப்படை கட்டுமான அமைப்புகள் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும், அவற்றில் எந்த அளவுக்கு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இருக்கும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்ட இளையரிடம் காணப்படும் பொதுவான நிலவரம்

சிங்­கப்­பூ­ரில் உள்­நாட்டு பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் கைதான இளை­ய­ரி­டையே பொதுவான ஒரு நில­வ­ரம் காணப்­ப­டு­கிறது. அவர்­கள் இணை­யத்­தில் இடம்­பெறும் தீவி­ர­வா­தத் தக­வல்­க­ளை எட்டி இருக்­கி­றார்­கள் என்­பதே அந்­தப் பொது­வான நில­வ­ரம்.

இளை­யர்­கள் தங்­கள் விட­லைப் பரு­வத்­தில் சூது­வாது புரி­யா­மல், தாங்­கள் யார்? தங்­களின் அடை­யா­ளம் என்ன? போன்றவற்­றைத் தேடிக் கண்­ட­றி­வ­தில் ஆர்வமாக இருப்பார்­கள். எதை­யா­வது துணிச்­ச­லாக செய்ய வேண்­டும் என்று விரும்­பு­வார்­கள்.

இவற்றைப் பயங்­க­ர­வாத கும்­பல்­கள் தங்­க­ளுக்குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­றன என்று உள்துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்ராகிம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

நிய­மன உறுப்­பி­னர் மார்க் சேவுக்­குப் பதில் அளித்துப் பேசிய இணைப் பேரா­சிரியரு­மான ஃபைஷல், இதர அரசாங்க அமைப்பு­கள், சமூகப் பங்கா­ளி­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு இணையத் தீவி­ர­வாத மனப்­போக்குக்கு எதி­ரான முயற்­சி­களை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எடுத்து வரு­வ­தாக தெரி­வித்­தார்.

இந்த முயற்­சி­களை ஒட்டி இந்­தத்­துறை இளையரை எட்டி வரு­கிறது. கல்வி அமைச்சு, பள்­ளிக்­கூடங்கள், உயர் கல்வி நிலை­ய­ங்கள் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து உரை­நி­கழ்ச்­சி­கள், பயி­ல­ரங்­கு­கள், ஆய்­வ­ரங்­கு­கள், இணையக் கருத்­த­ரங்­கு­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­பாடு செய்து அவற்­றின் வழி இந்­தத் துறை இளை­யரை எட்டி வரு­கிறது என்று துணை அமைச்சர் குறிப்­பிட்­டார்.

காலணிகள் மறுசுழற்சி திட்டத்தில் புதிய நிபந்தனைகள் அமல்

ஸ்போர்ட்எஸ்ஜி தேசிய அமைப்பும் காலணி மறுபுழக்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த அமைப்பின் பங்காளிகளும் தங்கள் நடைமுறைகளைக் கடுமையாக்கி இருக்கின்றன. அந்த அமைப்புகள் எடுத்துள்ள சரியாக்க முயற்சிகளில், எந்த ஒரு பழைய ஜவுளி, காலணி விற்பனையிலும் ஈடுபட்டிராத ஒப்பந்தக்காரர்களையும் துணை ஒப்பந்தக்காரர்களையும் மட்டுமே நியமிப்பதும் உள்ளடங்கும்.

காலணி மறுபுழக்க நடைமுறையில் குறைபாடுகள் தெரியவந்ததை அடுத்து இந்தச் சரியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

மறுபுழக்கத்திற்குச் சேகரமாகும் காலணிகள் அனைத்தும் நடுவில் எந்த ஓர் இடத்திலும் சேர்க்கப்படாமலும் பிரிக்கப்படாமலும் நேரடியாக ஆல்பா-டபிள்யூஎச் என்ற உள்ளூர் கழிவுப்பொருள் நிர்வாக நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதை இத்திட்ட பங்காளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்களின் கட்டடங்களில் வழக்கமாக திடீர் சோதனைகளை இத்திட்ட பங்காளிகள் நடத்த வேண்டும் என்று பல உறுப்பினர்களுக்கு அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்தார்.